தூங்காவனம் இசைவெளியீட்டு விழாவில் கமல் செய்த புதுமை..!

6௦ வயது இளைஞரான கமல் இந்த வருடத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்துவிட்டு, இதோ மூன்றாவது படமான ‘தூங்காவனம்’ ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு (சீக்காட்டி ராஜ்யம்) என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படம் மொத்தம் 6௦ நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தை கமலின் நீண்ட நாள் உதவி இயக்குனரான ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். படத்தின் இசை கமலின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜிப்ரான் தான். பிரகாஷ்ராஜ், கிஷோர், த்ரிஷா, ஆஷா சரத், மதுஷாலினி, உமா ரியாஸ்கான், யூகிசேது, சம்பத் உட்பட நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளை ஹெலி கேம் மூலமாக படம் பிடித்து ஆச்சர்யப்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல, இங்கே நடைபெற்ற ஆடியோ ரிலீஸ் விழாவை தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 25 தியேட்டர்களில் நேரடி ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இணையதளம் மூலமாகவும் லைவாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. இசையையும் ஐ-ட்யூனில் வெளியிட்டு விட்டார்கள்.

விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, தனுஷ், விஷால், ஸ்ருதிஹாசன், நிவேதா தாமஸ், ஸ்ரீப்ரியா, பொன்வண்ணன், கருணாஸ், கௌதம் மேனன், பாண்டிராஜ், அமீர், ஏ.எல்.விஜய், பாலாஜி மோகன், யுடிவி தனஞ்செயன் என திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.. இந்தப்படம் சரியான திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சியினால் தான் குறுகிய நாட்களில் முடிக்க முடிந்தது என தனது குழுவினருக்கு கமல் பாராட்டுக்களை தெரிவித்தார்.