தொண்டன் – விமர்சனம்

Thondan-movie review

சமூக சேவை செய்யும் ஒரு ஆம்புலன்ஸ் ட்ரைவரின் வாழ்க்கையில் ஒரு மோசமான அரசியல்வாதி குறுக்கிடுகிறான். அதன்பின் அந்த ட்ரைவரின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதுதான் படத்தின் கதைக்கரு.

தன்னை கொல்ல வந்தவனே ஆனாலும் கூட அவன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தால் ஆம்புலன்ஸில் அள்ளிப்போட்டுக்கொண்டு அவன் உயிரை காப்பாற்றும் பரந்த குணம் கொண்டவர் சமுத்திரக்கனி.. அரசியல்வாதியான நமோ நாராயணன் தனது அரசியல் எதிரியை ஆள் வைத்து வெட்ட, அவரை காப்பற்றும் சமுத்திரக்கனி, நமோவுக்கு எதிரியாக மாறுகிறார்.

நமோவின் தம்பி தான் ஒருதலையாய் காதலித்த கல்லூரிபெண்ணை கொல்ல முயல, மொத்த மாணவிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர்விடுகிறார். ஆனால் ஆம்புலன்ஸில் தாமதமாக கொண்டு வந்ததால் தான் உயிர் போனது என அப்போதும் நமோவின் கோபம் சமுத்திரக்கனியின் பக்கம் வலுவாகிறது..

பதிலுக்கு சமுத்திரக்கனியின் அப்பா மற்றும் மனைவி சுனைனா ஆகியோருக்கு பேரிழப்பை ஏற்படுத்துகிறார் நமோ நாராயணன். ஆனால் அஹிம்சையையே விரும்பும் சமுத்திரக்கனி, நமோ நாராயணனை எப்படி டீல் செய்கிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்.

சமுத்திரக்கனியின் நடிப்பை சும்மா வெறும் வார்த்தைகளால் அளவிட்டுவிட முடியாது. ஏனென்றால் சமுத்திரக்கனி சொல்வதை கவனிப்பதற்கென்றே இங்கே இளைஞர் கூட்டம் இருக்கிறது. ஆனால் ஆடிக்கும் கோடைக்கும் பெய்கின்ற மழைக்கும் ஐப்பசி மழைக்கும் வித்தியாசம் இல்லையா..? தமிழ் சினிமாவில் இருக்கும் மிக சிறந்த குணசித்திர நடிகர் சமுத்திரக்கனி கமர்ஷியல் ஹீரோவாக கொஞ்சம் தடுமாறியிருக்கிறார், மற்றவர்களுக்கு எல்லாம் பார்த்து பார்த்து கேரக்டரை வடிவமைக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி தனக்கான கேரக்டரை மோல்டு செய்வதில் நிறையவே தடுமாறி இருக்கிறார்.

இன்னொரு ஹீரோவான விக்ராந்தின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் போகப்போக நடிப்பில் பக்குவம் காட்டியுள்ளார். சுனைனா நடிப்பில் குறையில்லை என்றாலும் சமுத்திரக்கனியை அவர் காதலிக்க பயன்படுத்தும் டெக்னிக் அலுப்பை தருகிறது. சமுத்திரக்கனியின் தங்கையாக வரும் அர்த்தனா ரசிகர்கள் மனதில் பளிச்சென பதிகிறார்..

மினி வில்லனாக, காமெடியனாக பார்த்துவந்த நமோ நாராயணனை மெயின் வில்லனக்கியுள்ளார் சமுத்திரக்கனி.. அதனாலேயே மனதில் ஓட்ட மறுக்கிறார். சூரி, தம்பிராமையா இருவரும் க்ளைமாக்ஸில் பத்து நிமிடங்கள் மட்டும் வந்துபோனாலும் கலகலக்க வைக்கிறார்கள். கஞ்சா கருப்பு சமுத்திரக்கனியின் டிக்டேஷன்களை சரியாக பாலோ செய்திருக்கிறார். வேலா ராமமூர்த்தி, சௌந்தர்ராஜா, ஞானசம்பந்தன், ‘போராளி’ திலீபன், அனில் முரளி என துணை கதாபாத்திரங்களும் ஒகே தான்..

நம் ரசிகர்களுக்கு சமுத்திரக்கனியை பற்றிய ஒரு இமேஜ் மனதில் உண்டு. எப்போதும் குணச்சித்திர நடிகராக குறைந்த அளவு காட்சிகளில் ஹீரோயிசமாக அவரை பார்த்து பழகிய நமக்கு படம் முழுக்க அவரை ஹீரோவாக பார்ப்பது என்பது இலை முழுவதும் ஸ்வீட்டை பறிமாறியது போலவே இருக்கிறது. ரொம்பவே திகட்டுகிறது..

ஆம்புலன்ஸ், ஜல்லிக்கட்டு, மீத்தேன், ஒருதலை காதல் என சகல விஷயங்களையும் ஒரே படத்தில் சொல்ல முயற்சித்திருப்பதே படத்தின் பலவீனம் ஆகி விடுகிறது. அதேசமயம் நல்ல கருத்துக்களை தவிர வேறெதையும் கவனத்தில் கொள்ளாத சமுத்திரக்கனியின் நேர்மையும் ரசிக்க வைக்கிறது. தொண்டனுக்கு இன்னும் கொஞ்சம் சிறப்பாக பயிற்சி கொடுத்திருக்கலாம்.