திருட்டுப்பயலே 2 – விமர்சனம்

பத்து வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகமாக லேட்டஸ்ட் டெக்னாலஜி பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் ‘திருட்டுப்பயலே-2’.. முந்தையை பாகத்தைப்போல இதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளதா..? பார்க்கலாம்.

சைபர் க்ரைம் டிபார்ட்மெண்ட்டில் உயரதிகாரிகள் தரும் ‘போன் டேப்பிங்’ என்கிற ஒட்டுக்கேட்கும் பணியை செய்து வருகிறார் பாபி சிம்ஹா.. போலீஸ் பணியில் சேர்ந்த புதிதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக பணியாற்ற முயற்சித்து, அதில் தோல்வியுற்ற பாபி சிம்ஹா, இந்த ஒட்டு கேட்கும் வேலையில் கிடைத்த தகவலை பயன்படுத்தி பத்து கோடி ரூபாயை சுருட்டி, அதை தனது பினாமியிடம் ஒப்படைக்கிறார்.

அவரது காதல் மனைவி அமலாபால், பொழுதுபோகாமல் பேஸ்புக்கில் நேரத்தை செலவிட, அதன்மூலம் நட்பு என்கிற பெயரில் பெண் ஏமாற்று பேர்வழியான பிரசன்னா என்கிற வில்லங்கத்தை வழிய தேடிப்போய் சிக்கிக்கொள்கிறார். ஏதேச்சையாக மனைவியின் போனை ஒட்டுக்கேட்கும் பாபி சிம்ஹாவுக்கு இந்த விபரமும், பிரசன்னாவிடம் இருந்து அமலாபால் விடுபட நினைத்து முடியாமல் தவிக்கும் விபரமும் தெரிய வருகிறது.

மனைவிக்கு தெரியாமலேயே தனது அதிகார செல்வாக்கை வைத்து பிரசன்னாவை நாலு தட்டு தட்டி ஒதுங்க வைக்க முடிவெடுக்கிறார் பாபி சிம்ஹா. ஆனால் கம்ப்யூட்டர் ஜித்தனான பிரசன்னா, அடிபட்ட புலியாக மாறி பாபி சிம்ஹாவின் கம்யூட்டரை ஹேக் செய்து அவரிடம் உள்ள தில்லுமுல்லு சீக்ரெட்களை கைப்பற்றுகிறார்.

இப்போது ஒருவர் பிடி இன்னொருவர் கையில் என்கிற நிலையில் இருவருக்குமான ஆடுபுலி ஆட்டம் ஆரம்பிக்கிறது. இதில் அமலாபாலை பிரசன்னாவிடம் இருந்து பாபி சிம்ஹா தப்புவித்தாரா..? இல்லை அதையும் மீறி பிரசன்னா அமலாபாலை அடைந்தாரா..? இந்த இரண்டு பேரில் யாருடைய தப்புக்கு என்ன விதமான தண்டனை கிடைக்கிறது என்பதுதான் மீதிப்படம்..

அடுத்தவன் மனைவியை அனுபவிக்க நினைக்கும் கயவர்களின் முகமூடியையும் அதேசமயம் மனைவிகளின் மனதை புரியாமல் நடந்து கொள்ளும் கணவன்மார்களின் முகமூடியையும் ஒருசேர தோலுரித்து காட்டியுள்ளது இந்த திருட்டுப்பயலே-2’..

நல்லவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் டீசன்ட்டாக பணத்தை சுருட்டும் கேரக்டரில் பாபி சிம்ஹா தனது நடவடிக்கைகளை யதாரத்தமாக பிரதிபலித்துள்ளார். மனைவி தடம் மாறி போவது கண்டு கோபமாவதும் அதற்கு தானும் ஒரு காரணம் என குற்ற உணர்ச்சியால், அந்த தவறை சரி செய்ய முயற்சிப்பதுமாக சராசரி ஆசாபாசமுள்ள மனிதனாகவே வலம் வருகிறார் பாபி சிம்ஹா. தன்னை கார்னர் செய்யும் உயரதிகாரியை அவர் கார்னர் பண்ணி மடக்கும் இடம் சூப்பர்..

பாபி சிம்ஹாவை ஜஸ்ட், ஓவர்டேக் பண்ணுகிறார் பிரசன்னா.. பேஸ்புக் ரோமியோக்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக பிரசன்னாவை பார்க்க முடிகிறது.. அமலாபாலை அவர் வளைக்கும் விதம், பாபி சிம்ஹாவின் கையில் அதிகாரம் இருக்கிறது என்று தெரிந்தும், அலட்சியம் காட்டும் மனோபாவம் என பிரசன்னாவின் பங்களிப்பு இதில் ரொம்பவே உள்ளது,, ‘அஞ்சாதே’ படத்திற்குப்பின் அவருக்கு இது ஒரு முக்கியமான படம்.

இருதலைக்கொள்ளி எறும்பு என சொல்வார்களே அப்படிப்பட்ட கேரக்டரில் தனது நடிப்பால் ஜமாய்த்துள்ளார் அமலாபால். சராசரி குடும்ப பெண்கள் எங்கே தடுமாறி, தடம் மாறுகிறார்கள் என்பதற்கு அமலாபால் கதாபாத்திரம் ஒரு சாம்பிள் தான். மற்றபடி படத்தில் டிடெக்டிவாக வரும் இயக்குனர் சுசி கணேசன் ஆடும் டபுள் கேமும், போலீஸ் உயரதிகாரியான வழக்கு எண் முத்துராமன் ஆடும் அதிகார அரசியல் ஆட்டமும் கூட படத்தின் விறுவிறுப்பை கூட்டுகின்றன.

இன்று பரவலாக நடந்து வரும் சோஷியல் மீடியா க்ரைம் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு தனது பரபரவென்கிற திரைக்கதையால் மீண்டு(ம்) வந்திருக்கிறார் சுசி கணேசன். குறிப்பாக பினாமிக்களின் மூலம் சொத்து சேர்ப்போரின் வாழ்க்கை நிலை கடைசியில் என்னவாகும் என்பதற்கு ஒரு சாம்பிளையும் காட்டியுள்ளார். யாருக்கு எப்படியோ, பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் மனதை தடுமாறவிடும் யுவதியர்கள் ஒருமுறை இந்தப்படத்தை பார்த்தால், ஒரு பேரபாயத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம்.

இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு அவசியமான செய்தியை க்ரைம் கலந்து விறுவிறுப்பான படமாக கொடுத்துள்ள இயக்குனர் சுசி கணேசனை தாராளமாக பாராட்டலாம்..