திருமணம் – விமர்சனம்

நீண்ட நாட்கள் கழித்து சேரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.

வருமான வரித்துறையில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றும் சேரன், தங்கை காவ்யா சுரேஷ், அம்மா வடிவாம்பாள், மாமா தம்பி ராமையா என ஒரு கட்டு செட்டான நடுத்தரவர்க்க குடும்பத் தலைவன். இன்னொரு பக்கம் தம்பி உமாபதி தான் உலகம் என வாழும் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த அக்கா சுகன்யா.. இவர்களுக்கு பக்கபலமான உறவாக சித்தப்பா எம்.எஸ்.பாஸ்கர்.

எப்.எம்மில் வேலை பார்க்கும் உமாபதி மீது சேரனின் தங்கை காவ்யா நட்பாகிறார்.. இதை திருமணமாக மாற்றுவதற்கு தனது அண்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்.. உமாபதியின் வீட்டிற்குச் சென்று பேசி இந்தத் திருமண சம்பந்தத்தை உறுதி செய்கிறார் சேரன். ஆனால் பின் வரும் நாட்களில் திருமணத்தை தடபுடலாக நடத்த நினைக்கும் சுகன்யாவுக்கும் மிகவும் எளிதாக சிக்கனமாக நடத்த நினைக்கும் சேரனுக்கும் மண்டபம் பார்ப்பது, துணி மணிகள் எடுப்பது, கல்யாண சாப்பாடு ஏற்பாடு செய்வது என அனைத்திலுமே முட்டல் மோதல் ஏற்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் இந்த கல்யாணமே நிற்கும் அபாய சூழல் வருகிறது சொன்ன தேதியில் வேறு பெண்ணை பார்த்து திருமணத்தை நடத்த நினைக்கிறார் சுகன்யா. இந்த சிக்கல்கள் தீர்ந்து திருமணம் நல்லபடியாக நடைபெற்றதா..? இல்லை சுகன்யா தான் நினைத்ததை சாதித்தாரா..? பெண் வீட்டினராக இருந்தும் சேரன் ஏன், தன் தங்கைக்காக பல விஷயங்களை விட்டுக் கொடுக்காமல் பிடிவாதம் காட்டுகிறார் என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

முன்பெல்லாம் திருமண நிகழ்வுகள் என்பவை எங்கெங்கோ இருக்கும் சுற்றமும் நட்பும் சில நாட்கள் ஒன்றாக சந்தித்து, மீண்டும் சொந்தத்தையும் நட்பையும் பலப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்தது. ஆனால் காலப்போக்கில் நாகரீகம் வளர வளர திருமணங்கள் என்பவை இன்று ஆடம்பரமாகவும் சமூகத்தில் தங்களது அந்த அந்தஸ்த்தை மற்றவர்களிடம் பறைசாற்றிக் கொள்ள உதவும் ஒரு விழாவாகவும் மாறிவிட்டது பலருக்கும் வருத்தமாக இருக்கும். அந்த வருத்தம் தான் சேரன் இயக்கியுள்ள இந்த திருமணம் படம் முழுவதும் பிரதிபலித்துள்ளது.

ஆரம்பத்தில் காட்சிகள் சற்று நாடகத்தனமாக நகர்ந்தாலும், போகப்போக அந்த குடும்பத்தின் திருமண நிகழ்வு சார்ந்த பிரச்சனைகளுக்குள் நாமும் ஏதோ ஒரு வகையில் நம்மை அறியாமல் இழுபட்டு விடுகிறோம்.

குடும்பத் தலைவனாக சேரன் ஒவ்வொரு விஷயத்திலும் பணத்தை கணக்குப் பார்த்து செலவு பண்ணும் போது, அவர் மீது சில நேரத்தில் கோபம் ஏற்படவே செய்கிறது. ஒரு கட்டத்தில் அவரைப் பற்றிய உண்மை தெரிய வரும் போது அவர் செய்வது சரி தான் என்கிற உணர்வை படம் முழுவதும் தனது நடிப்பால் நம் தோற்று விக்கிறார் சேரன். குறிப்பாக இறுதிக்காட்சியில் தனது தங்கைக்கு அவர் சீர் வரிசை தரும் போது, திருமணங்கள் இப்படி நடைபெற்றால் மணமக்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்கிற எண்ணம் நமக்கு தோன்றுவது உண்மை..

தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா கடந்த இரண்டு படங்களை விட இதில் நடிப்பில் கொஞ்சம் பக்குவப்பட்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. காதலிக்கும் சகோதரிக்கும் இடையே நடுநிலையுடன் செயல்பட முயற்சிக்கும் தற்கால இளைஞனின் கேரக்டரை மிக அழகாக பிரதிபலித்துள்ளார்.. நாயகி காவ்யா சுரேஷ் சினிமாவுக்கு ஏற்ற மிகப்பெரிய அழகி இல்லை என்றாலும் இந்தக் கதைக்கு ஏற்ற அழகான ஒரு கதாநாயகி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நீண்ட நாளைக்கு பிறகு சுகன்யா.. ஜமீன்தார் குடும்பத்திற்கே உண்டான அந்த ஒரு கெத்தை படம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார்.. இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் மணப்பெண் மீது அவர் ஒரு துளி கூட கோபப்படாதது தான் அவரது கேரக்டரை மீது மதிப்பைக் கூட்டுகிறது.

படத்தை தாங்கி நிற்கும் இன்னும் இருவர் எம்எஸ் பாஸ்கர் மற்றும் தம்பி ராமையா.. இவர்கள் இருவருமே திருமணமே செய்யாமல் ஒவ்வொருவர் வீட்டு குடும்பத்துடன் ஏன் ஒட்டிக்கொண்டு உள்ளனர் என்கிற கேள்வி ஆரம்பத்தில் நமக்கு எழுவது இயல்பே.. ஆனால் பிற்பகுதியில் இவர்கள் இருவரின் கதையை கேட்கும்போது நம் கண்களில் கண்ணீர் வருவது நிஜம்.. எம்.எஸ்.பாஸ்கர் சொல்லும் கதையை கேட்டு விட்டு தம்பி ராமையா தன்னுடைய கதையை சொல்லும் போது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என நெகிழாத நெஞ்சம் இருக்க முடியாது.

மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து அல்லல்படும் தந்தை கதாபாத்திரத்தில் அழகாக வாழ்ந்துள்ளார் ஜெயபிரகாஷ். சுகன்யா வீட்டு கார் டிரைவராக, ஓவராக நடந்து கொள்ளும் பாலசரவணன் மைண்ட் வாய்ஸ் காமெடியில் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அம்மாவாக நடித்துள்ள மலையாள நடிகை சீமா ஜி நாயரை தேடி இனி தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும்.

படம் முழுவதும் மங்களகரமான இசையால் பிரமாதப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். அதே போல ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு படு பாந்தம். சேரனின் படங்கள் எப்போதுமே குடும்பத்தின் மேன்மையையும் சமூகப் பொறுப்பையும் கொண்டவையாகவே இருக்கும். இந்த படமும் அதற்கு விதி விலக்கல்ல. திருமணம் தான் மையக்கருத்து என்றாலும் அதில் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்தும் போகிற போக்கில் அழகாக வலியுறுத்தியுள்ளார் சேரன்.. நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல குடும்பப் படம் பார்த்த உணர்வை தந்ததற்கு இயக்குனர் சேரனுக்கு நன்றி சொல்லலாம்.