திருடன் போலீஸ் – விமர்சனம்

அட்டகத்தி தினேஷ் தனது மூன்றாவது படத்திலேயே போலீஸாக நடித்திருப்பதால் ரிலீஸுக்கு முன்பிருந்தே சற்று எதிர்பார்ப்பை கிளப்பிய எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள ‘திருடன் போலீஸ்’ அந்த எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டிருக்கிறதா..?

நேர்மையான கான்ஸ்டபிள் ராஜேஷ் கொலை செய்யப்பட, அந்த வேலை எப்போதும் அவரையும் அவரது போலீஸ் உத்தியோகத்தையும் வெறுக்கும் அவரது மகன் தினேஷுக்கு கிடைக்கிறது. பணியில் சேர்ந்த நாள் முதல் உயர் அதிகாரிகளுக்கு செய்யும் எடுபிடி வேலைகள் ஒருகட்டத்தில் அலுக்கவே, ராஜினமா செய்ய முடிவெடுக்கிறார் தினேஷ்.

ஆனால் நல்ல போலீஸ் கமிஷனரான ஆடுகளம் நரேன், தினேஷுக்கு புத்திமதி கூறி அவரது தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தூண்டுகிறார். அதன்படி கொலைகாரர்களை கண்டும் பிடிக்கிறாரர் தினேஷ்.. ஆனால் அவர்களுக்கு அவர் தரும் தண்டனை..? அதுதான் க்ளைமாக்ஸ்..

‘அட்டகத்தி’ தினேஷின் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் அவருக்கேற்ற மாதிரி கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காமெடி, ஆக்சன் இரண்டையும் சரிசமமாக வெளிப்படுத்துவதால் அவரது கேரக்டரின் மேல் நம்பகத்தன்மை இயல்பாகவே உருவாகிவிடுகிறது. கோபத்தை, அவமானத்தை அடக்கிக்கொண்டு அவர் பேசும் விதம் படு இயல்பு. அப்பா சென்டிமென்ட்டில் நண்பனை மட்டுமல்ல, வில்லன்களையும் அவர் டார்ச்சர் பண்ணும் காட்சிகளில் சிரிக்காமல் இருக்கவே முடியாது.

தினேஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்.. படம் முழுக்க இவர் வந்தாலும் படத்தில் இவருக்கு மொத்தமே வசனமே இரண்டு பக்கத்துக்குள் அடங்கிவிடுகிறது. என்றாலும் வரும் காட்சிகளில் எல்லாம் கண்களாலேயே தினேஷுடன் காதல் மொழி பேசி நம் மனதை அள்ளுகிறார் ஐஸ்..

மிகப்பெரிய பொறுப்பை தோளில் சுமந்திருக்கிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.. அதிலும் வில்லத்தனத்தின் ஊடான காமெடியில் உச்சம் தொடுகிறார். தினேஷிடம் “உன் தந்தை செத்ததுக்கு நீ அழுகிறயோ இல்லையோ, அவரை ஏண்டா கொன்னோம்னு நான் அழுகிறேன்பா”னு சொல்றார் பாருங்க.. சத்தியமா சரியான காமெடிங்க.. கூடவே ஜான் விஜய்யும் பாலசரவணனும் சேர்ந்துகொள்ள காமெடி களைகட்டுகிறது.

பர்பெக்ட் கமிஷனர் ஆடுகளம் நரேன், கடமையே கண்ணான கான்ஸ்டபிள் ராஜேஷ், குள்ளநரித்தனம் பண்ணும் அசிஸ்டன்ட் கமிஷனராக ‘பாண்டியநாடு’ முத்துராமன் என போலீஸ் டிபார்ட்மென்ட்டின் பலமுகங்களை படத்தில் நடமாடவிட்டிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜூ. நிதின்சத்யாவின் வில்லத்தனமும் ஓரளவு எடுபடுகிறது. யுவனின் இசையில் படத்தின் வேகத்தை தொந்தரவு செய்யாத பாடல்களில், விஜய்சேதுபதி ஆடும் பாடல் சிறப்பு.. அப்பா பற்றிய பாடல் உருக்கம்.

வழவழா கொழகொழா என்றில்லாமல், கதையை சிறிதும் பிசிறு தட்டாமல் இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் ராஜூ. போலீஸ் படம் என்பதால் ‘சிங்கம்’ மாதிரியோ அல்லது தந்தையை கொன்றவர்களை பழிவாங்க மகன் புறப்படுவதால் விஜய் படம் ரேஞ்சுக்கோ யோசிக்காமல் புது ரூட்டில் பயணித்திருக்கிறார் இயக்குனர். அதுவே படத்திற்கு பிளஸ்சாக அமைந்திருக்கிறது.

திருடன் போலீஸ் – உற்சாக ஆட்டம்