திரைப்படமாக உருவாகியுள்ள ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு..!

தான் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக  இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர் தயாரிப்பாளரும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி.சரண். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் என அவரது முந்தைய படங்கள் எல்லாம்  ஒரு தயாரிப்பாளராக அவருக்கு நல்ல பெயரையே வாங்கித்தந்தன.

சிறிது காலம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சரண், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி படப்பிடிப்பையும் விட்டார். படத்தின் பெயர் ‘திருடன் போலீஸ்’. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திக் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். சிறுவயதில் நாம் விளையாடிய திருடன் போலீஸ் விளையாட்டை நவீனமாக்கி அவர் கூறிய கதைதான் மீண்டும் சரணுக்கு உடனடியாக படம் எடுக்கும் ஆவலை தூண்டியதாம்.

குக்கூ’ படம் மூலம் வித்தியாசமான முயற்சிகளுக்கு கைகொடுப்பவர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ள ‘அட்டகத்தி’ தினேஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘ரம்மி’ ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் ஐஸ்வர்யா நடிக்க உள்ளார். இவர்களுடன் பாலசரவணன், நிதின் சத்யா, ஜான்விஜய், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

எஸ்.பி.பி.சரணின் நண்பன் யுவன் ஷங்கர் ராஜா தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். சரணின் கேபிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா ஃபிலிம் சார்பில் ஜே.செல்வகுமார்  இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்.