இந்தி ‘ராணி’யுடன் பிறந்தநாள் கொண்டாடினார் தியாகராஜன்..!


கடந்த மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘க்வீன்(queen) படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற பலத்த போட்டி நிலவி வந்த சூழ்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்தப்படத்தை ரீமேக் செய்யும் உரிமையை கைப்பற்றியுள்ளார் நடிகர் தியாகராஜன்.

அனுராக் காஷ்யப் தயாரித்த இந்தப்படத்தில் கங்கனா ரணவத் கதாநாயகியாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட பனிரெண்டரை கோடியில் தயாராகிய இந்தப்படம் 97கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்தது. தற்போது இந்தப்படத்தை இயக்க சில முன்னணி இயக்குனர்களும், இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சில முன்னணி கதாநாயகிகளும் தங்களுக்கு வாய்ப்பு வராதா என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளும் விதமாக தனது பிறந்தநாளான இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் தியாகராஜன். அந்த சந்திப்பின்போது ‘க்வீன்’ படத்தை தான் வாங்கியதற்கான காரணத்தை பற்றி விரிவாக பதிலளித்தார்.

“பெண்களைப் பற்றிய படம் ஒன்று பண்ணவேண்டும் என ரொம்பநாளாகவே ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தேன். சமீபத்தில் இந்தியில் வெளியாகிய ‘க்வீன்’ படத்தை பார்த்தபோது இதை ஏன் நாம் ரீமேக் பண்ணக்கூடாது என உடனே தோன்றியது. அதனால் தமிழுக்கு மட்டுமல்லாமல் தெலுன்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளுக்கும் சேர்த்து ரீமேக் உரிமையை வாங்கிவிட்டேன்” என்கிறார்.

படத்தை நீங்களே இயக்குவீர்களா என கேட்டபோது, “புதிய இயக்குனர்களும் வரட்டுமே.. அதனால் இந்தப்பட்த்தை நான் இயக்கவில்லை. அதேபோல தமிழில் எடுத்து மற்ற மொழிகளுக்கு டப்பிங் செய்யும் எண்ணமும் இல்லை. அந்தந்த மொழிகளில் அந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப தனித்தனியாகவே படமாக்க இருக்கிறேன். நான்கு மொழிகளிலும் பட்த்திற்கு ‘ராணி’ என்று டைட்டில் வைத்துள்ளோம். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.. ஆனால் நான்கு மொழிகளுக்கும் ஒரே கதாநாயகி தான்.. அதுதான் படமாக்க வசதியாகவும் இருக்கும்” என்கிறார் தியாகராஜன்.

இன்று பிறந்தநாள் காணும் தியாகராஜனுக்கு நமது behind frames இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இந்தப்படத்தின் வெற்றிக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.