தெரு நாய்கள் – விமர்சனம்

இப்போது டெல்டா மாவட்டங்களில் புகைந்துகொண்டிருக்கும் மீத்தேன் திட்டத்திற்காக விவசாயிகள் பல தங்களது நிலங்களை பறிகொடுத்த சோக நிகழ்வுகள் அரங்கேறின அல்லவா..? அப்படி ஒரு நிகழ்வை மையப்படுத்தி அதிரடியாக உருவாக்கி இருக்கும் பழிவாங்கல் கதை தான் ‘தெரு நாய்கள்’ படம்..

மொத்தமாக இனிப்பு, கார வகைகள் செய்து விற்பனை செய்பவர் இமான் அண்ணாச்சி.. அவருக்கு பக்கபலமாக அப்புக்குட்டி, ராம்ஸ், பிரதீக், ஆறு பாலா, பாவல் நவகீதன் என உழைக்கும் விசுவாசமான பிள்ளைகள்.. மீத்தேன் திட்டத்திற்கு இடத்த ஆக்கிரமிப்பு செய்யும் வேளையில் இறங்கும் எம்.எல்.ஏ மதுசூதன் ராவ், அன்னாசியின் தம்பியை கைக்குள் போட்டுக்கொண்டு, நிலத்தை தர மறுக்கும் இமான் அண்ணாச்சியை கொலை செய்கிறார்.. இமான் அண்ணாச்சியிதம விசுவாசமாக சோறு தின்று வளர்ந்தவர்கள் எம்.எல்.ஏவை எப்படி பழி தீர்க்கிறார்கள் என்பதுதான் மீதிப்படம்.

படத்தின் மைய கதாபாத்திரம் என்றால் இமான் அண்ணாச்சிதான். பிளாஸ்பேக்கில் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் அவர் ஒரு காமெடி நடிகர் என்பதையே மறந்து, நம்மையும் மறக்க வைத்து குணச்சித்திர நடிகராகவே மாறிவிட்டார். அப்புக்குட்டி, ராம்ஸ், பிரதீக், ஆறு பாலா, பாவல் நவகீதன் ஆகியோர் வளர்த்த பாசத்தை நெஞ்சில் சுமந்து கோபத்தையும் விசுவாசத்தையும் சமமாக காட்டியிருக்கின்றனர். வில்லனாக மதுசூதன் ராவ் வழக்கம்போல உறுமுகிறார்.

மீத்தேன் வாயு எடுப்பதின் அபாயம், எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதிப்பதால் வாழ்விழந்த விவசாயிகள், குழாய் வெடித்து இறக்கும் அப்பாவிகள், மலடாகும் நிலம், தாய்ப்பால் உட்பட உணவு வழியே எல்லாமும் விஷமாகும் அவலம், நாம் ஓட்டுப்போட்டு நம்மை அல்ல அனுப்பிய அரசியல்வாதிகள் பணத்திற்காக நம்மையே கூறுபோடும் அவலம் என அனைத்தையும் ஓரளவு நியாயமாகவே பதிவு செய்ததற்காக இயக்குனரை தாராளமாக பாராட்டலாம்.

மொத்தப்படமும் சமூக மற்றும் அரசியல் அவலங்கள் மீதான கோபம் என்பதால், படத்தின் கதையை எழுதும் போது, கொஞ்சம் உக்கிரமாகவே இருந்திருக்கிறார் போலும். அதனாலேயே பொழுதுபோக்கிற்கு என இயக்குநர் ஹரி உத்ரா பெரிதாக மெனக்கடவில்லை என்பது தெரிகிறது. இமான் அண்ணாச்சியின் அண்ணன், அவரது மச்சினி என பிரியும் கிளைக்கதை கதையுடன் ஒட்டாமல் கொஞ்சம் துறுத்திக்கொண்டு இருக்கிறது. எம்.எல்.ஏவை கடத்தியபின் வரும் காட்சிகளில் பெரும்பாலும் பில்டப்புகள் தான் தூக்கலாக தெரிகிறது. அதை குறைத்திருந்தால் சற்று எதார்த்தம் கூடியிருக்கும்.. பழிவாங்கல் பிரச்சனையில் மீத்தேன் திட்டத்தின் வீரியம் பெரிதாக எடுபடாமல் அமுங்கிப்போகிறது.

தெருநாய்கள் – கடிக்காமல் குறைக்க மட்டுமே செய்திருக்கின்றன.