தி செவன் த் டே (மலையாளம்) – விமர்சனம்


நடிகர்கள் : பிருத்விராஜ், ஜனனி ஐயர், வினய் ஃபோர்ட், அனுமோகன், டொவினோ தாமஸ், பிரவீண் பிரேம், ஜாய் மேத்யூ, யோக் பாஜி..
இயக்கம் : ஷியாம்தர்

ஐந்து நண்பர்கள், ஒரு சஸ்பெண்ட் செய்யப்பட்ட க்ரைம் பிராஞ்ச் அதிகாரி, கூடவே 1.75கோடி ரூபாய்.. இவற்றுடன் அவ்வப்போது அருமையான திருப்பங்கள், க்ளைமாக்ஸில் ‘மங்காத்தா’ ட்விஸ்ட் என சுவையாக பின்னப்பட்ட அருமையான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் தான் ‘தி செவன் த் டே’.

இரவில் ஜீப் ஓட்டிவரும் பிருத்விராஜ் தனக்கு முன்னால் பைக்கில் செல்லும் வினய் ஃபோர்ட், அனுமோகன் இருவர்மீதும் தெரியாமல் மோதிவிடுகிறார். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றும்போதுதான் அவர்கள் ஏதோ ஒரு சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது. அதுபற்றி அவர்கள் சொல்லும் பிளாஸ்பேக்காக ஆரம்பிக்கிறது படம்.

ஜனனி ஐயர், வினய் ஃபோர்ட், அனுமோகன், டொவினோ தாமஸ், பிரவீண் பிரேம் ஐந்துபேரும் நண்பர்கள். அனுமோகனின் கம்ப்யூட்டர் அலுவலகத்தில் 1.75 கோடி ரூபாய் யாராலோ ஒளித்து வைக்கப்படுகிறது. யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அந்தப்பணம் பிரேமின் கண்களில் தட்டுப்பட, யாருக்கும் தெரியாமல் அதை வேறோர் இடத்தில் மறைத்து வைக்கிறார் பிரேம்.

ஆனால் அந்த பணத்தை தேடி வரும் வில்லன் யோக் பாஜி தலைமையிலான கும்பல் அதை அனுமோகன் தான் எடுத்து ஒளித்துவைத்திருப்பதாக நினைத்து அவரையும் அவரது குடும்பத்தையும் பணத்தை தரச்சொல்லி சித்திரவதை செய்து 36மணி நேரம் கெடுவைக்கிறது.

அப்போது பிரேம் நண்பனிடம் உண்மையை சொல்லி பணத்தை ஒளித்துவைத்த இடத்திற்கு அழைத்துச்செல்கிறான். ஆனால் அங்கே பேக் இருக்கிறது. அதில் பணம் இல்லை. இந்நிலையில் வில்லன்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இப்போது பிளாஸ்பேக் முடிகிறது.
பிருத்விராஜை சந்தித்த சில தினங்களில் திடீரென ஒருநாள் அனுமோகன் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகிறான். என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் பிருத்விராஜ். விசாரணையின் இறுதியில் இறந்தது அனுமோகன் இல்லை, இன்னொரு நண்பனான டொவினோ தாமஸ் என்கிற அதிர்ச்சியடைய வைக்கும் உண்மை தெரியவருகிறது.

டொவினோ தாமஸ் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார் என்பதை, ஒரு காதல், அதில் ஒரு நம்பிக்கை துரோகம், பழிவாங்கல் உட்பட சில முடிச்சுக்களை அவிழ்த்து கண்டுபிடிக்கிறார் பிருத்விராஜ். படம் முடிந்தது என்று எழுந்திருக்கும் நேரத்தில் மங்காத்தா பாணியில் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்து ஆச்சர்யம் விலகாமல் வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார் பிருத்விராஜ்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட க்ரைம் பிராஞ்ச் அதிகாரி டேவிட் ஆப்ரகாமாக பிருத்விராஜ்,. போன வருடம் ‘மும்பை போலீஸ்’ படத்தில் ராஸ்கல் மோசஸ் என்ற போலீஸ் அதிகாரியாக ஆக டெரர் காட்டிய பிருத்விராஜா இது..? சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு கேரக்டரில்.. சான்ஸே இல்லை.. ஆக்ஷன், ஃபைட் என எந்த அதிரடியும் இல்லாமல் அமைதியாக அவர் விசாரணை செய்யும் அழகே தனி தான்..

நண்பர்களுக்குள்ளே நடக்கும் துரோகங்களையும், பழிவாங்கலையும் அவர் கண்டுபிடிக்கும் விதம், அதற்காக அவர் காய் நகர்த்தும் பாணி எல்லாமே அசத்தல் ரகம். அதிலும் அந்த 1.75 கோடி ரூபாய் யாருடையது என்றும் அது எதற்காக வைக்கப்பட்டது என்பதையும் தனது விசாரணையில் பிருத்விராஜ் கண்டுபிடிப்பது அசத்தல் என்றால், கடைசியில் வில்லன் யோக் ஜேபியுடன் சேர்ந்து நிற்கும் ஒரே காட்சியில் பல புதிர்களுக்கு விடையளித்து நம்மை வியப்பில் உறைய வைக்கிறார்.

நண்பர்கள் ஒவ்வொருத்தரிடம் இருந்து ஒவ்வொரு விதமாக உண்மைகள் வெளிப்படும் தருணங்கள் எல்லாம் யூகிக்க முடியாத அதிர்ச்சி ரகங்கள். ஜனனி ஐயர் அழகிலும் நடிப்பிலும் க்யூட்.. ‘ஷட்டர்’ படத்தில் பார்த்த வினய் ஃபோர்ட்டா இது..? நம்பவே முடியவில்லை.. ஆளே மாறிவிட்டார்.

இவர்கள் தவிர துணை கதாபாத்திரங்களாக வரும் மருத்துவமனை செக்யூரிட்டி, மார்ச்சுவரி வாட்ச்மேன், டாக்டராக வரும் இயக்குனர் ஜாய் மேத்யூ. அனைவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தை இயக்கிய ஷியாம்தருக்கு இது முதல் படமாம். நம்பவே முடியவில்லை.. க்ளைமாக்ஸ் வரை கதையில் உள்ள அத்தனை சஸ்பென்ஸ்களையும் உடைக்காமல் தக்கவைத்த வகையில் அவரை பாராட்டியே ஆகவேண்டும்.

பிருத்விராஜ் ஏன் சஸ்பென்ட் செய்யப்பட்டார் என்ற கேள்விக்கே போகாமல் ஆரம்பத்திலேயே சாதாரணமாக விட்டிருப்பதால் தான் க்ளைமாக்ஸ் ஆட்டம் ‘மங்காத்தா’ போல விறுவிறுப்பாக இருக்கிறது.

ஆகவே மகா ஜனங்களே.. ‘தி செவன்த் டே’ படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்களுக்கு நல்ல தீனிபோடும் என்பதில் டவுட்டே இல்லை.