நல்லவர்களை கெட்டவர்களாக்கும் தமிழ்சினிமா..!

villains

இன்றைய தேதியில் கமர்ஷியல் படங்களை இயக்கம் இயக்குனர்களுக்கு சவாலாக இருப்பது படத்திற்கான கதை உருவாக்கம் மட்டுமல்ல.. படத்திற்கு வில்லனாக யாரை ஒப்பந்தம் செய்வது என்பது தான். காரணம் வில்லன் ரேங்கில் இருக்கும் பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் ஆகியோர்கள் எல்லாம் கேரக்டர் ரோலுக்கு மாறிவருகிறார்கள்.

ஒருசிலர் பக்கத்து மாநிலங்களில் இருந்து வில்லன்களை கடன் வாங்கி வர, இன்னும் சில இயக்குனர்கள் இங்கேயே புதிய வில்லன்களை உருவாக்குகிறார்கள். ஆனால் என்ன ஒன்று, புதிதாக ஒரு ஆளை வில்லனாக கொண்டு வருவதற்கு பதிலாக ஒரு காலத்தில் ஹீரோக்களாக, நல்லவர்களாக மக்கள் மனதில் பதிந்தவர்களை இப்போது வில்லனாக உருமாற்றி வருகிறார்கள்.

இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. ‘ஐ’ சுரேஷ்கோபி, ‘அனேகன்’ கார்த்திக், ‘என்னை அறிந்தால்’ அருண்விஜய், தனி ஒருவன் ‘அரவிந்த்சுவாமி’, நானும் ரௌடி தான்’ பார்த்திபன் என ஐவரை வில்லனாக்கி வேர்ரிவகையும் சூட்ட வைத்து விட்டார்கள். போதாதென்று பாடகர் விஜய் யேசுதாசையும் கூட வில்லனாக மாற்றினார்கள்.

இப்போது ‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இயக்குனர் மகேந்திரனும் வில்லனாக நடித்து வருகிறார்களாம். இவர்கள் தற்காலிகமான வில்லன்களா அல்லது நிரந்தர வில்லன்களா என்பது போகப்போகத்தான் தெரியும்..