தங்கரதம் – விமர்சனம்

thangaratham movie

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வண்டி ஓட்டும் இரண்டு கிராமத்து இளைஞர்களுக்கு நடக்கும் சண்டை இதில் ஒருத்தரின் காதல் சிக்கிக்கொண்டு என்ன பாடுபடுகிறது என்பதை சொல்லியிருக்கும் படம் தான் இந்த தங்கரதம்.

ஆடுகளம் நரேனின் வண்டியில் தினசரி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றி செல்லும் ட்ரைவர் வெற்றி.. இன்னொரு பக்கம் சொந்தமாக வண்டி வைத்து தானே ட்ரைவராக ஓட்டுகிறார் சௌந்தர்ராஜா. வெற்றி குறித்த நேரத்திற்கு காய்கறிகளை மார்க்கெட் கொண்டுவருவதால் சௌந்தர்ராஜாவுக்கு ஒரு சிலரால் அவமரியாதை ஏற்படுகிறது..

இந்த இருவருக்கும் இருக்கும் பகை தெரிந்தும் ஒரு கட்டத்தில் வெற்றியை காதலிக்க ஆரம்பிக்கிறார் சௌந்தர்ராஜாவின் தங்கை அதிதி கிருஷ்ணா.. இந்தநிலையில் ஏற்கனவே சௌந்தர்ராஜாவின் மேல் உள்ள கோபம் காரணமாக மொட்டை ராஜேந்திரன் சௌந்தரின் வண்டி கண்ணாடியை உடைக்க, அந்த பழி வெற்றி மேல் விழுகிறது..

கொலைவெறியுடன் வெற்றியை துரத்தும் சௌந்தர்ராஜாவிடம் இருந்து வெற்றியை காப்பாற்ற, அவரை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார் நரேன்.. மேலும் சௌந்தர்ராஜாவை சாந்தப்படுத்தும் முயற்சியாக தனது மகனுக்கு அவரது தங்கை அதிதியை திருமணம் பேசி நிச்சயதார்த்தம் முடிக்கிறார்.

இந்த விபரங்கள் எதுவும் தெரியாமல் ஊருக்கு திரும்பும் வெற்றியிடம் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறார் காதலி.. தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தப்பா நரேனின் பாசத்திற்காக அவரது கௌரவத்திற்காக வெற்றி தனது காதலை விட்டுக்கொடுத்தாரா..? இல்லை காதலித்தவளை கைபிடிப்பதற்காக சித்தப்பாவின் பாசத்தை வெற்றி தூக்கி எறிந்தாரா.என்பதுதான் க்ளைமாக்ஸ்..

கிராமத்து பின்னணியில் இரண்டு இளைஞர்களின் மோதலை மொத்தப்படமாக மாற்றி இருக்கிறார்கள்.. ஆரம்பத்தில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் காட்சிகளையும் டெம்போ வேன் சேசிங்கையும் காட்டி பிரமிப்பு ஏற்படுத்திவிட்டு பின்னர் அந்த ரூட்டை பயன்படுத்தாமல் வழக்கமான ரூட்டிற்கு மாறும்போது இதுவும் பத்தோடு பதினொன்றுதானா என்கிற அலுப்பையே ஏற்படுத்துகிறது..

இருந்தாலும் படத்தில் நடித்துள்ள அனைவரும் கிராமத்து கதைக்கு பொருத்தமான தேர்வு என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.. வெற்றி, அதிதி ராவின் காதல் காட்சிகள் நமக்கு பதட்டத்தையே ஏற்படுத்துகின்றன.. சௌந்தர்ராஜா என்றாலே கோபக்கார இளைஞன் தான் என்கிற பிம்பத்தை இந்தப்படத்தில் மீண்டும் நன்றாகவே வலுப்படுத்தி இருக்கிறார்.

கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு சென்றுவரும் மாணவி கேரக்டரில் நாயகி அதிதி இயல்பாக பொருந்துகிறார்.. பாசக்கார சித்தப்பாவாக ஆடுகளம் நரேனின் நடிப்பு நெகிழவைக்கும் ஒன்று.. மொட்ட ராஜேந்திரனின் சலம்பலும் அந்த கேபிள் டிவி கனெக்சன் காமெடியும் ஓரளவு ரசிக்க வைக்கிறது.. அடடே யாரப்பா இது என ஆச்சர்யப்படும்படி வெள்ளைப்புறா கேரக்டரில் நடித்திருக்கும் குள்ள மனிதர் பாண்டியன் தனது அசால்ட்டான, காமெடியான நடிப்பில் மற்ற அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்..

செஞ்சோற்றுக்கடன், காதல், தியாகம் என எண்பது, தொண்ணூறுகளில் ட்ரென்டிங்கில் இருந்த கிராமத்து காதலை, இந்த காலத்திற்கு என எதுவும் அப்டேட் செய்யாமலேயே படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் பாலமுருகன்..கதை வெகு சாதாரண ஒன்றாக இருப்பது பலவீனம்.. மிக நேர்த்தியான காட்சிகள் இருந்தாலும் அவற்றில் பல நாம் பார்த்து பழக்கப்பட்டவை தான்.. எளிமையான இந்த கிராமத்து காதலை இன்றைய இளசுகள் ஏற்றுக்கொள்வார்களா..?