தம்பி – விமர்சனம்

மக்களுக்காக நல்லது மட்டுமே செய்யும் சத்யராஜ் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏ ஆக இருக்கிறார்.. சிறுவயதிலேயே அவரது மகன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட மனைவி சீதா, மகள் ஜோதிகா என எல்லோருமே என்றாவது ஓடிப்போனவன் வரமாட்டானா என்கிற ஏக்கத்துடன் நாட்களை கடத்துகின்றனர். இந்த நிலையில் ஓடிப்போன மகன் இளைஞன் கார்த்தியாக திரும்பி வருகிறார். அப்பாவும் அம்மாவும் பாசத்துடன் ஏற்றுக்கொண்டாலும் அக்கா ஜோதிகா மட்டும் தம்பியிடம் கோபமுகம் காட்டுகிறார்.. ஆனால் கார்த்தியின் சிறுவயது நண்பன் தற்போது போலீசாக இருக்கும் அன்சன் பால் கார்த்தியை நம்ப மறுக்கிறார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மலை கிராமத்து மக்களை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சத்யராஜ், ஜோதிகாவுடன் சேர்ந்து கார்த்தியும் குரல் கொடுக்கிறார். ஆனால் அடுத்து வரும் நாட்களில் எதிர்பாராத விதமாக தன் மீது நடைபெறும் கொலை தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிக்கிறார்… இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தானே களமிறங்கி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் கார்த்திக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகின்றன.. அது என்ன என்பது கிளைமாக்ஸ்.

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் இவர்களது நடிப்பை பற்றி நாம் மீண்டும் மீண்டும் புகழ்ந்து கருத்து சொல்வது நமக்கே போரடிக்கும் விஷயம்.. அதனால் அவர்களின் பணி சிறப்பானது என ஒரே வார்த்தையில் அழகாக சொல்லி விட்டு மற்ற விஷயங்களுக்குள் போகலாம். இவர்கள் மூவரையும் தாண்டி போலீஸ் அதிகாரியாக வரும் அன்சன் பாலுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவரும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகி நிகிலா விமலுக்கு வழக்கமான டிபிகல் கதாபாத்திரம்.. கார்த்தியின் நண்பனாக வரும் பாலா அந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு என்றாலும் ஒரு சில காட்சிகளில் நாடகத்தனமாக நடிப்பு நன்றாகவே தெரிகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் இளவரசுவின் பலே கிரிமினல் திட்டங்கள் திகைக்க வைக்கின்றன. சத்யராஜ் நண்பராக கூடவே வரும் ஹரிஷ் பெராடி தன் பங்கிற்கு கதைக்கு திருப்பம் கொடுக்கிறார். சீதா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, கார்த்தியை கலாய்க்கும் அந்த சிறுவன் எல்லோருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக சௌகார் ஜானகி வீல் சேரில் அமர்ந்துகொண்டு கண்களாலேயே கார்த்தியை மிரட்டுவது செம..

மேட்டுப்பாளையம், ஊட்டி பகுதிகளில் நகரும் கதைக்களத்தில் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை த்ரில்லிங் மூடுக்கு ஏற்ப ஒத்துழைத்த அளவிற்கு பாடல்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

சிறுவயதில் காணாமல் போன மகன் வீட்டிற்கு பல வருடங்கள் கழித்துத் திரும்பி வருகிறான் என்றால், இந்தக் கதை எந்தந்த திசைகளில் நகரும் என நீங்கள் நினைக்கிறீர்களா அதையெல்லாம் ஆரம்பத்திலேயே அடைத்து விடுகிறார் ஜீத்து ஜோசப்.. அதுதவிர கிளைமாக்ஸ் நெருங்கும்போது இதற்கு விடை இதுவாகத்தான் இருக்கும் என நீங்கள் நினைக்கும் எதுவுமே விடை அல்ல என திருப்பங்களுக்கும் மேல் திருப்பங்களாக கொடுத்து நம்மை அசர வைத்து இறுதிக்காட்சியில் அட என நம்மை ஆச்சரிய படுத்துகிறார் ஜீத்து ஜோசப்.

படத்தின் முதல் பாதி ஒரு சாதாரண குடும்ப கதை போல எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் நகர்வது மட்டும்தான் படத்தின் ஒரே ஒரு பலவீனமான பாயிண்ட். ஆனால் இடைவேளைக்குப்பிறகு அதற்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக ரசிகர்களுக்கு தீனி போட்டு அந்தக் குறையை சமப்படுத்தி விடுகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்..

மொத்தத்தில் ஏற்கனவே ஜீத்து ஜோசப்பின் பாபநாசம் படத்தை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இன்னொரு விதமான திரில்லர் விருந்து படைத்து அனுப்புகிறார் ஜீத்து ஜோசப்..

கார்த்திக்கு இது மீண்டும் இன்னொரு வெற்றிப் படம் என்பதில் சந்தேகமில்லை.