‘தலைவி’ கங்கனாவை ஒரே சமயத்தில் திணறடித்த மூன்று சந்தோஷங்கள்


மறைந்த தமிழக முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற படம் தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மணிகர்ணிகா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது, இன்றைய தினம் அவரது பிறந்தநாள், அந்த பிறந்தநாளில் அவர் நடித்துள்ள தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியாவது என கங்கனா ஒன்றுக்கு மூன்று சந்தோஷ நிகழ்வுகளால் ரொம்பவே உற்சாகமாக காணப்பட்டார்.

இவ்விழாவில் கங்கனா, அரவிந்த்சாமி, சமுத்திரகனி, தம்பி ராமையா, ஜி.வி.பிரகாஷ், மதன் கார்க்கி, பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதர மகனாகிய தீபக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர், இயக்குநர் சமுத்திரகனி பேசும்போது, “இந்தப்படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என பயமாக இருந்தது இயக்குநர் விஜய் 1000 பக்கங்கள் கொண்ட “ஆர் எம் வி ஒரு தொண்டர்” எனும் புத்தகத்தை படிக்க சொன்னார். படித்ததும் இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களா, என ஆச்சர்யகரமாக இருந்தது.. அந்த கதாபாத்திரத்தில் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார் இயக்குனர் விஜய். சிறு சிறு விசயங்களிலும் மெனெக்கெட்டு உழைத்தார். கங்கனா ரணவத். ஜெயலலிதா அம்மாவின் ஆவி புகுந்தது போல் செய்திருக்கிறார். நிச்சயம் அவரது உழைப்பு பாராட்டு பெறும்”. என்றார்

இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் பேசும்போது, “தலைவி இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் இசை ஒரு காலகட்டத்தை சொல்வதாக இருக்கும். அந்த காலகட்டத்தை இசையில் கொண்டுவர முயற்சித்துள்ளேன். ஜெயலலிதா அம்மாவிற்கு ஒரு தனி இசை தொகுப்பை உருவாக்கியிருக்கிறேன்” என கூறினார்.

திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் பேசுகையில், “இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவை அழைத்தபோது, ஜெயலலிதா மாதிரி நடிக்க நான் என்ன செய்யவேண்டும் என கேட்டார்.. நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா.. கங்கனாவும் அதே போன்றவர் தான். தற்போது தேசிய விருதை வென்றுள்ளார். தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.” என கூறினார்

இயக்குனர் விஜய் பேசும்போது, “இப்படத்திற்காக இரு வருடங்கள் முன் தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது, சிறு தயக்கம் இருந்தது. பின்னர் இப்படம் செய்ய வேண்டும் என ஒப்புகொண்டேன். எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் வேலை செய்தது, மீண்டும் பள்ளி செல்வது போல், மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா அவர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி, அவருடைய திறமை அளப்பறியது, கதையினை உணர்ந்து நடிப்பார். எடை கூட்டியது, குறைத்தது என இப்படத்தில் அவரது பங்கு அதிகம். அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமையை பற்றிய படமாக இது இருக்கும்” என்றார்.

நடிகர் அரவிந்த் சாமி பேசும்போது, “ஒன்றரை வருட பயணம் இது.. இப்படத்தில் மிகப்பெரும் ஆளுமைகள் ஒன்றிணைந்து பணியாற்றீயுள்ளார்கள் அவர்களால் தான் இப்படம் சாத்தியமாகியுள்ளது. கங்கனா அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரகனி, தம்பி ரமையா, நாசருடன் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் இப்படத்தில் நடிக்க நான் கஷ்டப்பட்டு உழைத்ததாக கூறினார்கள். ஒரு கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டும் என்று நமக்கு முதலிலேயே தெரியும் அதை செய்ய வேண்டியது நம் கடமை. நான் இஷ்டப்பட்டு மகிழ்சியுடன் தான் இப்படத்தை செய்தேன் இப்படிபட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது.” என்றார்.

விழாவின் இறுதியில் முத்தாய்ப்பாக நடிகை கங்கனா ரனாவத் பேசும்போது, குறிப்பாக இயக்குனர் விஜய் குறித்து பேசும்போது, சற்றே உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்

“தலைவி” திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியனேன். பிறகு இயக்குனர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது.

பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை தலைவி படத்தில் இயக்குனர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். என் திறமைக்கு மதிப்பளித்தார். {அவர் இதனை கூறியபோது கண்கலங்கினார்} என்னை முழுதாக இப்படத்திற்காக மாற்றினார்.. இப்படம் மொத்த இந்தியாவிற்கானது. அனைவருக்கும் பிடிக்கும். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்” என்றார்.

இந்த படத்தினை Zee Studios நிறுவனம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.