தலைவா – விமர்சனம்

ஆஸ்திரேலியாவில் ஒரு பக்கம் வேலை.. ஒரு பக்கம் டான்ஸ் கிளாஸ் என ஜாலியாக சுற்றுகிறார் விஜய். டான்ஸ் என்றாலே அங்கே ஹீரோயின் வரவேண்டுமே.. அமலாபால் வருகிறார்.. ஹீரோவை காதலிக்க வேண்டுமே.. அதையும் செய்கிறார். அமலாபாலின் தந்தை சுரேஷ் சொன்னதற்காக அவர்களுடன் சேர்ந்து மும்பையில் இருக்கும் தன் அப்பாவை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்க வருகிறார் விஜய்.

இங்கே வந்தபின் தான், தந்தையின் தாதா வாழ்க்கையும் கூடவே தன்னை இங்கே வரவழைத்ததே தலைமறைவாக இருக்கும் தன் தந்தையை பிடிக்க போலீஸ் விரித்த வலைதான் என்பதும் தெரிய வருகிறது. அந்த அதிர்ச்சியை ஜீரணிப்பதற்குள் மும்பை மக்களின் காட்பதராக இருக்கும் சத்யராஜை வில்லன் கும்பல் வெடிகுண்டு வைத்து போட்டுத்தள்ள அவரை நம்பியிருக்கும் மக்களின் தலைவனாகும் பொறுப்பு விஜய் மேல் சுமத்தப்படுகிறது. எதிரிகளை சமாளிக்கவும் தன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்கவும் விஜய் என்னவிதமான அஸ்திரங்களை எடுக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

மூன்றுமணி நேர படத்தை ஆஸ்திரேலியாவில் பாதி.. மும்பையில் மீதி என இரண்டாக பிரித்து எடுத்திருக்கிறார்கள். விஜய் சும்மாவே டான்ஸில் காட்டு காட்டென்று காட்டுவார். அதிலும் டான்ஸ் குரூப் நடத்துகிறார் என்றால் சொல்லவா வேண்டும். கூடவே சந்தானமும் சேர்ந்துகொள்ள முதல் பாதியை எந்த அலட்டலும் இல்லாமல் டான்ஸும் பாட்டுமாக அசால்ட்டாக ஊதித் தள்ளியிருக்கிறார் விஜய். பிற்பாடு மும்பையில் தாதாவாக மாறும்போது பாடிலங்குவேஜை மாற்றி அப்படியே விஷால் பாயாக மாறி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். தன் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதைவிட ஒருபடி அதிகமாக கொடுத்திருக்கிறார் விஜய்.

விஜய்யை பொறி வைத்துப் பிடிக்கும் கன்னிவெடியாக அமலாபால். விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் என்பதை தவிர அமலாபாலிடம் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. இடைவேளைக்குப்பின் வரும் அமலாபாலின் போலீஸ் அவதாரம் கிச்சுகிச்சு மூட்டுகிறது.

சந்தானத்தின் காமெடி படத்தை சிரமமில்லாமல் நகர்த்தி செல்கிறது. அதிலும் டான்ஸ் மூலமாக அமலாபாலை கவனம் ஈர்க்க முயற்சி செய்து பல்பு வாங்கும் காட்சிகள் எல்லாம் அக்மார்க் சந்தானம் பிராண்ட் காமெடி. பின்னாளில் விஜய்க்கு வலது கையாக மாறும்போதும் கூட மனிதர் சிரிக்க வைக்கிறார்.

கொஞ்சநேரமே வந்தாலும் சத்யராஜின் அலட்டல் இல்லாத நடிப்பு நம்மை கவர்கிறது. அதேபோல பொன்வண்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா, சுரேஷ், இன்னொரு கதாநாயகியான ராகினி என எல்லோருமே அவரவர் தாங்கள் சரியான தேர்வுதான் என்பதை நிரூபிக்கிறார்கள்.

படத்தின் பெரிய பலம் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு. ஆஸ்திரேலியாவின் பிரமாண்டத்தை புதிய கோணத்தில் நம் கண் முன்னே நிறுத்துகிறார். ஜி.வி.பிரகாஷின் இசையில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலும் அதற்கான நடனமும் நம்மை கவர்கின்றன. மற்ற பாடல்களும் ஓகே ரகம்தான். ஆனால் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

விஜயை வைத்து படம் இயக்கும்போது அவருக்கென்று உள்ள ஃபார்முலாவை சரியாக கவனத்தில் கொள்ளவேண்டும். அதில் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டால் போச்சு. இதற்கு முந்தைய விஜய் படத்தில் அந்த ஃபார்முலாவை சரியாக கையாண்டிருந்தார்கள். ஆனால் ஏற்கனவே பார்த்த சில படங்களின் சாயலுடன் இந்தப்படத்தில் எந்த ஒரு புதுமையையும் செய்யாமல் மாஸ் படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். மற்றபடி இந்தப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்க வேண்டிய அளவுக்கு அரசியல் எதுவும் இந்தப்படத்தில் இல்லை என்பதுதான் உண்மை. ஒ.கே.. விஜய்யின் அடுத்த சூப்பர்ஹிட் படத்துக்காக காத்திருப்போம்.

நடிகர்கள்: விஜய், சத்யராஜ், அமலா பால், சந்தானம், மனோபாலா, பொன்வண்ணன்

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

இசை: ஜிவி பிரகாஷ்குமார்

தயாரிப்பு: சந்திரபிரகாஷ் ஜெயின்

எழுத்து – இயக்கம்: விஜய்

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>