தடம் – விமர்சனம்

டபுள் ஆக்சன் படங்கள் பல இதுவரை வந்திருந்தாலும் அருண்விஜய் முதன் முதலாக டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கும் இந்தப்படம் கொஞ்சம் புதுசு தான்.. கதையும் தினுசு தான்..

சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு பில்டிங் காண்ட்ராக்டராக இருக்கும் அருண்விஜய்க்கு (எழில்) தன்யா மீது காதல்.. இன்னொரு பக்கம் திருட்டு வேலைகள் செய்து பிழைப்பை ஓட்டி வரும் இன்னொரு அருண்விஜய் (கவின்) காதலில் நம்பிக்கை இல்லாதவர்.. காதல் என்றாலே முகம் சுளிப்பவர்… அவரது சுயரூபம் தெரியாமல், தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுத்து தனது காதலையும் அவரிடம் வெளிச்சம் போடுகிறார் ஸ்மிருதி.

இந்த நிலையில் கவினின் நண்பன் யோகிபாபு பைனான்ஸியருக்கு கட்ட வைத்திருந்த தொகையை எடுத்து சீட்டாடி தோற்றுவிட்ட கவின், அந்த பணத்தை எப்படியாவது புரட்டி பைனான்சியரிடம் இருந்து யோகிபாபுவை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். இந்த நிலையில் ஒரு மழைநாள் இரவில் தனியாக வீட்டில் இருந்த கோடீஸ்வர இளைஞர் ஒருவரை அருண்விஜய் குத்தி கொல்கிறார்.. கொன்றது அருண்விஜய் தான் என்கிற தட(ய)ம் போலீஸாருக்கு கிடைக்க அருன்விஜய்யை (எழில்) அழைத்துவந்து லாக்கப்பில் வைத்து விசாரிக்கின்றனர்.

அதே சமயம் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக இன்னொரு அருண் விஜய்யும் (கவின்) போலீசாரிடம் சிக்கி அதே ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்படுகிறார்.. இதனால் அதிர்ச்சியாகும் போலீசார் இந்த இருவரில் கொலை செய்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளும் அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதும் அந்த கொலைக்கான பின்னணி என்ன என்பதும் தான் மீதிக்கதை.

முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பது என்பது ஒரு நடிகருக்கு மிகப்பெரிய சவால் மட்டுமல்ல, அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான தருணமும் கூட. இந்தப்படத்தில் அருண்விஜய்க்கு அது அழகாக, வெற்றிகரமாகவே அமைந்து விட்டது என்று தாராளமாக சொல்லலாம். இரண்டு கேரக்டர்கள் என்றாலும் உருவ ஒற்றுமையும் ஒரேபோல இருந்தாலும் தனது அழகான நடிப்பாலும் சின்ன மேனரிசங்களாலும் இரண்டு கேரக்டர்களையும் வித்தியாசப்படுத்தி அதேசமயம் பிரமாதப்படுத்தியுள்ளார் அவறது கேரக்டர்களில் ஒளிந்துள்ள ரகசியமும் அது வெளிப்படுவதும் செம ட்விஸ்ட்

கதாநாயகிகள் தன்யா, ஸ்மிருதி என இரண்டு பேர் இருந்தாலும் அவர்கள் பெயரளவுக்கு மட்டுமே வந்து போகிறார்கள். என் பெயர் என்னனு தெரியுமா என அருண்விஜய்யிடம் ஸ்மிருதி கேட்கும் இடம் ‘நச்’. அதேசமயம் படம் முழுக்க கதையின் நாயகியாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் வித்யா பிரதீப் மிடுக்கான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை தட்டி செல்கிறார்

யோகி பாபு ஒரு சீரியஸான காமெடி ரோல் இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்து இருக்கிறார். நீண்ட நாளைக்கு பிறகு சோனியா அகர்வால் அவரது பிளாஷ்பேக் புதுசாக இருந்தாலும் அதை சற்று சுருக்கியிருந்தால் இன்னும் வலுவானதாக அமைந்திருக்கும். அதுபோல போலீஸ் அதிகாரியாக வரும் பெப்சி விஜயனின் கடுமை கலந்த நடிப்பு வழக்கம்போல் சபாஷ் சொல்ல வைக்கிறது. இவர்களை தாண்டி வித்யாவிடம் ஜொல்லுவிடும் அந்த பாரன்சிக் அலுவலராக நடித்திருப்பவரும் ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் அருண்ராஜின் இசையும் மொத்த படம் முழுவதும் ஒருவித திரில்லிங் உணர்வை ஏற்படுத்தி, நம்மை இருக்கை நுனியிலேயே அமர வைக்கின்றன. பாதி படத்திற்கு மேல் இரண்டு அருண்விஜய்களிடமும் போலீசாரின் விசாரணை என்கிற ரீதியிலேயே படம் நகர்ந்தாலும் அதை அலுப்புத்தட்டாமல் கொஞ்சம் கூட சுவாரசியம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி..

தவிர இந்த இருவருக்குமான ஒரு இணைப்பை அழகான டிவிஸ்ட் ஆக வைத்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.. பல இடங்களில் நடந்த ஆச்சரியமான சம்பவங்களின் உண்மை தொகுப்பை மையப்படுத்தி இந்த கதையை அவர் உருவாக்கியிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. மகிழ் திருமேனியின் படங்கள் எப்போதுமே ரசிகர்களை நன்றாக திருப்திப்படுத்திவிடும். இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளதுடன் தனக்குமான வெற்றியையும் தேடிக்கொண்டு உள்ளது.