தெனாலிராமன் – விமர்சனம்

நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். தனது ரசிகர்களை காக்கவைத்ததற்கு ஏற்ற சரியான தீனியை போட்டிருக்கிறார் வடிவேலு.

விகட நகர மன்னருக்கு எதிராக சதி செய்து, சீன வணிகர்கள் நம் நாட்டில் நுழைய வழிசெய்துகொடுக்கிறார்கள் அவருடைய அமைச்சர்கள். ஆனால் அதில் நல்லவர் ஒருவர் அதற்கு மறுக்க, அவரைப் போட்டுத்தள்ளுகிறார்கள். அதன்பின் அந்த இடத்திற்கு அமைச்சராக வரும் மதியூகி தெனாலிராமனும் அன்னிய வாணிபத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான்.

ஆனால் அவன் மீது வீண்பழி சுமத்தி மன்னன் மூலமாகவே தெனாலிராமனை நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு சீனர்களுக்கு வாணிபத்துக்காக அனுமதி கொடுக்கிறார்கள். மனம் மாறிய மன்னர் தெனாலிராமனை மீண்டும் அழைக்கிறார். அவன் மூலமாக நாட்டில் நடைபெறும் அவலங்களையும் கண்கூடாக காண்கிறார். பின் தானே நேரடியாக களத்தில் இறங்கி, நாட்டில் அன்னிய வாணிபத்திற்கு எதிராக புரட்சியை ஏற்படுத்தி, துரோகிகளை ஒழித்துவிட்டு தெனாலிராமனுடன் நல்லாட்சியை நிறுவுகிறார் மன்னர்.

என்னடா இது வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் புத்தகத்தில் வரும் கதையின் சுருக்கம் மாதிரியே இருக்கிறது என தோன்றுகிறதா.? நாம் சிறுவயது முதல் ரசித்து படித்த தெனாலிராமன் கதைதானே.. அதைத்தான், அன்னிய வாணிகத்தை அனுமதித்தால் என்ன நடக்கும் என்று, இன்றைய நாட்டு நடப்புடன் நகைச்சுவை கலந்து ஆனால் உறைக்கும் விதமாக சொல்லியிருக்கிறார் இந்த தெனாலிராமன்.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. மன்னர், அமைச்சர் என இரண்டு வேடங்களும் அவருக்கு சாலப்பொருத்தம். 36 மனைவிகள், 52 பிள்ளைகள் என ஜெகஜால மன்னராக இருந்தாலும் சரி, அவ்வப்போது சிக்கலில் சிக்கி தனது அறிவைப் பயன்படுத்தி தப்பிக்கும் தெனாலிராமனாக இருந்தாலும் சரி, படம் பார்ப்பவர்களை சிரிக்கவைப்பது ஒன்றுதான் தன் குறிக்கோள் என செயல்பட்டிருக்கிறார் வடிவேல்.

அதிலும் ஆகட்டும்.. டும்.. ம் என அவர் சொல்லும் டயலாக் இன்னும் கொஞ்ச நாள் ஃபேஸ்புக், ட்விட்டர் அனைத்திலும் உலாவரும். கதாநாயகியாக மீனாக்ஷி தீட்சித். இருந்தாலும் வடிவேலுக்கு ஜோடியாகவும், மகளாகவும் வருவது மற்றும் கொஞ்சம் உறுத்தல்.. மற்றபடி காதல் காட்சிகள் என்று பெரிதாக போரடிக்கவெல்லாம் இல்லை.

மனோபாலா, கிருஷ்ணமூர்த்தி, அல்வா வாசு, முத்துக்காளை, கிங்காங், பாலாசிங், சண்முகராஜன், மன்சூர் அலிகான் உட்பட இதுவரை வடிவேலுவின் படங்களில் தொடர்ந்து நடித்துவந்த நண்பர்கள் குரூப் அத்தனை பேருக்கும் இந்தப்படத்தில் சமமான வேலை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரியாகவும் செய்திருக்கிறார்கள். ராதாரவிக்கு மிக முக்கியமான வேடம்.

ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவும் மற்றும் ஆர்ட் டைரக்ஷனும் வரலாற்று காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இமானின் இசையில் பாடல்கள் கேட்பதற்கே புதுவிதமாக இருக்கின்றன. நிச்சயம் குழந்தைகளை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

சிறுவர்மலரில் குழந்தைகள படித்து மகிழ்ந்த கதையை முழுநீள வண்ணப்படமாக விரித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன். இன்றைய ஆட்சியாளர்கள் தற்போது செய்வது என்ன, செய்யத்தவறியது என்ன என்பதையும் கொஞ்சம் அதிரடியாகவே சொல்லியிருப்பதற்காக அவரது துணிச்சலை பாராட்டலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிப்பதற்கு இந்த சம்மர் லீவில் வந்திருக்கும் ஸ்பெஷல் படம் தான் இந்த தெனாலிராமன்.. இனி நீங்க படத்துக்கு கிளம்ப வேண்டியதுதான் பாக்கி.. கிளம்புங்க…