தரமணி – விமர்சனம்

Taramani-Tamil-Movie

இயக்குனர் ராம் எந்தவிதமான படங்களை இயக்குவார் என நம்மால் கணிக்க முடியாது.. ஆனால் குழந்தையாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அந்த படத்தை உளவியல் ரீதியாக அணுகுவதே அவரது பாலிசி.. இந்த தரமணியில் எதை எப்படி அலசியிருக்கிறார்..? பார்க்கலாம்.

கணவனை பிரிந்து தனது மகனுடன் வாழ்பவர் ஆண்ட்ரியா.. காதல் தோல்வியால் வாழ்க்கை கசந்த நிலையில் ஆண்ட்ரியாவை சந்திக்கிறார் வசந்த் ரவி.. நாளடைவில் இருவருக்கும் காதல் மலர, போகப்போக ஆண்களுக்கே உரித்தான சந்தேக குணம் எனும் அரக்கன் வசந்த் ரவிக்குள் புகுந்துகொள்கிறான்.. இந்த சந்தேகம் அந்த காதலை எப்படி சிதைக்கிறது.. எல்லாம் உணர்ந்து தெளிவு கிடைத்தபோது, உடைந்த அந்த காதல் கண்ணாடியை மீண்டும் ஒட்டவைக்க முடிந்ததா..? உணர்ச்சி பூர்வமாக அல்லாமல் உளவியல் ரீதியாக அருமையாக பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்.

ஆண்ட்ரியா இந்தப்படத்தை தனது நடிப்பால் தூணாக தாங்கிப்பிடித்துள்ளார். காதல், நெருக்கம், கசப்பு, விரக்தி, வெறுப்பு, சலிப்பு என்று எல்லா உணர்ச்சிகளையும் எதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். தனித்துவமான இந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு கச்சிதமாகச் செய்யமுடியுமோ, அத்தனை நேர்த்தியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக எங்களுக்கும் சிகரெட் பிடிக்க காரணமிருக்கு என கெத்தாக புகைபிடித்தபடி பதில் சொல்லும் காட்சி செம மாஸ்.

இயக்குனர் ராமின் இன்னொரு பிம்பமாகத்தான் நாயகன் வசந்த் ரவி நடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது. பெண்களின் கற்பு குறித்த சந்தேகக்கேள்விகளை எப்போதும் சுமந்து திரியும் ஆண்களின் அற்பத்தனத்தை காட்சிக்கு காட்சி முகத்தில் பிரதிபலிக்கிறார். முதல்பாதி முழுவதும் இயல்பான நடிப்பைத் தந்திருக்கும் வசந்த் ரவி, அந்த ஓட்டத்தின் அலுப்பிலோ என்னவோ பின்பாதியில் சற்றே பின்தங்கிவிடுகிறார்.

காதலித்தவனை கழட்டிவிட்டு பிராக்டிக்கலாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் அஞ்சலியின் கேரக்டர் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போய் அதன் கலாசாரச் சூழலுக்கு ஏற்ப மாறும் அஞ்சலி, பின்னாளில் தன பழைய காதலனை சந்திக்கும்போது, நாம எடுத்துக்கிட்ட போட்டோஸ் உன்கிட்டயே இருக்கட்டும். உன்னால ஒண்ணும் பண்ண முடியாது. நான் சந்திச்சதிலேயே ஒரே நல்லவன் நீதான்” என சொல்லும்போது நேர்மையற்ற காதலர்களின் முதுகில் சவுக்கடி கொடுத்தது போல இருக்கிறது.

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக வரும் அழகம்பெருமாள், அவரது மனைவி, போலீஸ் கமிஷனராக அறிமுகமாகி இருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட படத்தின் பல பாத்திரங்களும் தங்களது இருப்பை அழகாக உணர்த்துகின்றன.

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் இழப்பு எத்தகையது என்பதை கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது இசையால் உணர்த்துகிறார் யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் அடிக்கடி வந்தாலும் கதைப் போக்கின் விளைவையும், கதாபாத்திரங்களின் மன உணர்வையும் நமக்குக் கடத்திவிடுகின்றன நாம் பார்த்ததை விட பார்க்காத தரமணியின் இன்னொரு பக்கத்தை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

ஆண் பெண் இருவருக்குமான உறவுச் சிக்கல்களை, காதல் என அடையாளப்படுத்தப்படும் மனித மனத்தின் வக்கிர பக்கங்களை சாட்டையடியாக விளாசியிருக்கிறார் இயக்குனர் ராம். அதேசமயம் தமிழக மீனவர் படுகொலை, ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது, வடமாநிலத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது என இன்னும் சில பாதிப்புகளை சொல்லிவிட முனைந்திருப்பது நல்ல விஷயம் என்றாலும் இந்தப்படத்திலே அது கதையை விட்டு வெளியே துருத்திக்கொண்டு தெரிவது உண்மை.

வழக்கமான ஒரு சினிமா பார்முலாவில் அடங்காமல் இந்தப்படத்தை உருவாக்கியிருப்பதே ராமின் துணிச்சல் தான்.. நாகரிக வாழ்க்கையில் தங்களை தொலைத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்களே, இந்த ‘தரமணி’க்கு ஒரு விசிட் அடியுங்கள்.. உங்களுக்குள் மாற்றம் நிகழ்ந்தால் சந்தோஷமே..