தமிழ்படம்-2 ; விமர்சனம்

tamilpadam 2 review
சினிமாவை கலாய்த்து எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்களா என தமிழ்படம் வெளியான நேரத்தில் பிரமிப்பு ஏற்பட்டது. இப்போது அதே சி.எஸ்.அமுதன்-சிவா கூட்டணியில் வெளியாகியுள்ள தமிழ்படம்-2 அந்த மாயாஜாலத்தை மீண்டும் நிகழ்த்தியுள்ளதா..? பார்க்கலாம்.

இந்தப்படத்தின் கதை இதுதான் என நாம் கணித்தவரை சொல்கிறோம்.. தனக்கு இடைஞ்சலாக இருக்கும் போலீஸ் அதிகாரியான சிவாவை மிரட்டுவதாக அவரது மனைவி திஷா பாண்டேவை சுட்டுக்கொள்கிறார் தீவிரவாதியான சதீஷ்.. முகம் தெரியாத அவரை கண்டுபிடித்து அழிப்பதற்காக மீண்டும் டூட்டியில் சேர்கிறார் சிவா. கூடவே பாட்டி கலைராணியின் அறிவுரையை ஏற்று இன்னொரு திருமணம் செய்ய காதலிக்க தொடங்குகிறார். ஐஸ்வர்யா மேனனுடன் சிவா காதலில் விழ, அவரையும் போட்டுத்தள்ளுகிறார் சதீஷ்.

ஒருகட்டத்தில் சதீஷுடன் மோதும் சிவா, அவரை அழித்துவிட்டதாக நினைக்க, மீண்டும் உயிர்பெற்று வருகிறார் சதீஷ் (ஷ்ஷ்.. அப்பா). இது தெரியாத சிவா மீண்டும் ஐஸ்வர்யா மேனன் போலவே இருக்கும் இன்னொரு பெண்ணை காதலிக்க, மீண்டும் சதீஷ்-சிவா டக் ஆப் வார் தொடங்குகிறது. முடிவில் யாருக்கு ஜெயம் என்பது க்ளைமாக்ஸ்.

கதை என்பது இந்தப்படத்தை பொறுத்தவரை விஷயமே இல்லை.. சினிமா, அரசியல் நிகழ்வுகளை மரண கலாய் கலாய்க்க வேண்டும். ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற நோக்கில் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள்.. ஆரம்பத்தில் சில காட்சிகள் அப்படி இருந்தாலும் முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யத்தை இந்தப்படத்தில் அப்படியே கொண்டுவர முடியவில்லை என்பதே உண்மை.

படத்தின் மெயின் சுவிட்ச், பல்ப் எல்லாமே சிவா தான். லேட்டஸ்ட்டாக வந்த படங்களின் காட்சிகள், அரசியல் நிகழ்வுகள் என சமீபத்தில் வெளியான சர்கார் பர்ஸ்ட் லுக் வரை சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார்.அதில் கத்தி இட்லி மேட்டர், சாமி டிபன் பாகஸ் மேட்டர், சத்ரியன் விஜயகாந்த் ரிட்டர்ன் மேட்டர் என டீசரில் பார்த்து ரசித்த வெகுசில விஷயங்களே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. ஹீரோ சிவாவை விட காமெடியன், இல்லையில்லை வில்லன் பீயாக (என்ன பெயரோ) நடித்துள்ள சதீஷ், அதிக காட்சிகளில், அதிக கெட்டப்புகளில் வருகிறார். ஆனால் இவரும் நிறையவே ஏமாற்றுகிறார்.

கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா மேனன் துறுதுறுவென இருக்கிறார். நடிப்பை நிரூபிக்க இன்னொரு படத்தில் நடித்தால் போச்சு.. முந்தைய பட நாயகி திஷா பாண்டேவை ஒரே ஒரு காட்சியில் மட்டும் காட்டிவிட்டு மேலே அனுப்பி விடுகிறார்கள் பாவம்… அட.. அழுமூஞ்சியாகவே பார்த்துவந்த கலைராணி இதில் காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தான பாரதி என சிவாவின் இளம்வயது மாமா மச்சான் நண்பர்கள் கூட்டணிக்கு வேலை குறைவு தான். பாதி சீரியஸ், பாதி காமெடி என தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் போலீஸ் அதிகாரியாக வரும் சேத்தன்.

சுனாமியின் பினாமியே என பாடல்களும் வழக்கம்போல கிண்டல் ரகம் தான். சிரித்துவிட்டு போகலாம். ஓவர் கான்பிடன்ஸ் என சொல்வார்களே, இந்தப்படத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் காட்டியிருப்பது அதுதான். ஹிட் படங்களின் காட்சிகளை கலாய்க்க முயற்சி செய்தவர், அதை அழகான கதை ஒன்றால் கோர்த்திருக்கலாம். அதை சரியாக செய்ய தவறிவிட்டார் மனிதர். இருநூறு ரூபா கொடுத்து வாங்கிய பலாப்பழத்தில் கால்வாசி அழுகியிருந்தாலும் முக்கால்வாசியை ரசித்து சாப்பிடுவோம் தானே.. அந்த மாதிரி டீசர், ட்ரெய்லரில் நம் எதிர்பார்ப்பை எகிறவைத்து அதை படம் முழுதும் தக்கவைக்க தவறினாலும் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் பல இடங்களில் ரசித்து சிரித்துவிட்டு வரலாம்.