ரஜினியின் அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டி.எஸ்.விநாயகம் காலமானார்..!

சுமார் 100க்கும் அதிகமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள மூத்த திரைப்பட ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம் நேற்று காலமானார். அவருக்கு வயது 78. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விநாயகம், நேற்று அதிகாலை மாரடைப்பால் இறந்தார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்த அவர், பின்னர் எஸ்.பி.முத்துராமன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். சிவாஜி நடித்த கல்தூண், பைலட் பிரேம்நாத், வாழ்க்கை, ரஜினி நடித்த காயத்ரி, ராஜா சின்ன ரோஜா, குரு சிஷ்யன், மனிதன், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.. குறிப்பாக ரஜினியின் அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்.