அநியாய தியேட்டர் கட்டண வசூல் மீது டி.ராஜேந்தரின் தொடர் தாக்குதல்..!

சூப்பர்ஸ்டாரின் மிக நெருங்கிய நண்பரான நாகராஜன் ராஜா தயாரித்துள்ள ‘புதியதோர் உலகம் செய்வோம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று காலை கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜெயம் ரவி, தேவயானி, டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி, எஸ்.பி.முத்துராமன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்தப்படத்தை நித்யானந்தம் என்பவர் இயக்கியுள்ளார். இவர் சின்னத்திரையில் ‘ஆனந்தம்’ என்ற நெடுந்தொடரை இயக்கியவர்தான்.. இந்தப்படத்தில் விஜய் டிவி ஜூனியர் சிங்கரில் வெற்றிபெற்ற பல குழந்தைகள் நடித்திருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் பெற்றோருக்கு பாடம் சொல்லும் குழந்தைகளைப் பற்றிய படமாக இது உருவாகி இருக்கிறது.

இந்த விழாவில் பேசிய டி.ராஜேந்தர் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் பற்றி காரசாரமாக் தாக்கினார்.. “பத்து வருஷமா ஏவி.எம்.ராஜேஸ்வரில 50ருபாய் தான் டிக்கெட்டே.. அங்க எப்பவுமே ஹவுஸ்புல்லாகுது எப்படி? மத்த இடத்துல எல்லாம் 120ரூபாய் டிக்கெட் வாங்குனா அப்புறம் சாதாரண ஜனங்க எப்படி தியேட்டருக்கு வருவான்..

பார்க்கிங்குக்கு 50 ரூபாய்.. பாப்கார்னுக்கு 50ரூபாய்.. இப்படி கட்டணம் இருந்தா திருட்டு விசிடி வாங்காம என்ன பண்ணுவான்..?

ட்ரெய்ன்ல ஒரே டிக்கெட் எடுத்துட்டு எதுல வேணாலும் போகமுடியுமா..? அது அதுக்குன்னு தனித்தனியா கட்டணம் இருக்குல்ல.. அதேமாதிரி தியேட்டர்கள மொதல்ல ரெண்டா பிரிங்க.. பெரிய படத்துக்கு ஒரு ரேட்டு.. சின்ன படத்துக்கு ஒரு ரேட்டு அப்படின்னு பிரிங்க.. அப்பத்தான் ஜனங்க தியேட்டருக்கு வருவாங்க.. நம்ம மேல தப்ப வச்சுக்கிட்டு ஜனங்களை குத்தம் சொல்லாதீங்க” என டி.ராஜேந்தர் விளாசித்தள்ளினார்.

அவர் பேசியபோது மேடையில் உட்கார்ந்திருந்த கமலா தியேட்டர் அதிபர் கணேஷ் உட்பட பலர் நெளிந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. நேற்று முன் தினம் நடைபெற்ற ‘தகடு தகடு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கூட தியேட்டர் கட்டணத்தை குறைக்க இதேபோல அதிரியாக பேசியது குறிப்பிடத்தக்கது.

பின் குறிப்பு : இன்று நடைபெறவிருக்கும் ‘மணல் நகரம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ள இருக்கிறாராம் டி.ராஜேந்தர்.