சைரா நரசிம்மா ரெட்டி – விமர்சனம்

சிரஞ்சீவி (நரசிம்மா ரெட்டி) ஆந்திராவில் ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வருகிறார். ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த காலகட்டம் அது. சிற்றரசருக்கான அதிகாரங்கள் அவருக்கு இல்லை. ஆனாலும் மக்கள் அவர் மீது கொண்ட அதீத அன்பு, மரியாதை காரணமாக அவரை ஒரு அரசராகவே பாவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஆங்கிலேயர்கள் மக்களை வரி கட்டுமாறு வற்புறுத்துகின்றனர். ஏற்கனவே வறட்சி மற்றும் பஞ்சத்தால் தவிக்கும் மக்கள் மேலும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். மக்களைக் காப்பாற்ற ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்களின் பகையை சம்பாதிக்கிறார் நரசிம்மா ரெட்டி.

ஆகையால் ஆத்திரமடையும் ஆங்கிலேயர்கள் நரசிம்மா ரெட்டியை குறி வைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் சைரா மீதுள்ள நன்மதிப்பை கெடுக்க நினைக்கின்றனர். ஆனால் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. மக்கள் அனைவரும் சைராவுக்கு துணை நிற்கின்றனர்.

ஆங்கிலேயர்களுடன் போராடுவதற்கு தன்னுடன் இருக்கும் அனைத்து சிற்றரசர்களையும் இணைக்கும் முயற்சியில் நரசிம்மா ரெட்டி ஈடுபடுகிறார். முதலில் மறுக்கும் சிற்றரசர்கள் பின்னர் சைராவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பார்த்து நரசிம்மா ரெட்டியுடன் இணைந்து ஆங்கிலேய படைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர்.

இவ்வாறு போராடும் போதே நயவஞ்சகர்களால் நரசிம்மா ரெட்டிக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. ஆங்கிலேயப்படையால் கைது செய்யப்படுகிறார் நரசிம்மா ரெட்டி.

அதன் பிறகு நரசிம்மா ரெட்டியின் நிலை என்ன? நரசிம்மா ரெட்டிக்கு யாரால் துரோகம் நிகழ்ந்தது? அவரின் வீரத்திற்கும், சுதந்திர உணர்வுக்கும் விடை என்ன? போன்ற கேள்விகளுக்கு பதிலாக அமைந்திருக்கிறது மீதி படம்.

இயக்குனர் சுரேந்தர் ரெட்டி சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு உண்மையில் வாழ்ந்த ஒரு வீரனின் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் தெரிகிறது.

நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி வாழ்ந்து இருக்கிறார். தண்ணீருக்குள் தவம் இருக்கும் அவரது அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார். வீரம், காதல், இரக்கம், விட்டு கொடுத்தல், மக்களை ஒருங்கிணைப்பது என்று கதாபாத்திரத்துக்கு வலு கூட்டி இருக்கிறார். இனி சைரா என்றாலே சிரஞ்சீவி முகம் தான் நினைவுக்கு வரும். அதிலும் கடைசி 20 நிமிட காட்சிகள் சிரஞ்சீவி ரசிகர்களுக்கே உரியது.

நயன்தாரா, தமன்னா என 2 கதாநாயகிகள். இருவருக்குமே சிரஞ்சீவிக்கு உதவியாக இருக்கும் வேடங்கள். சரியாக செய்து இருக்கிறார்கள்.

சிரஞ்சீவியின் குருவாக அமிதாப் பாந்தமான நடிப்பால் கவர்கிறார்.

சிரஞ்சீவியின் உயிர்த்தோழனாக விஜய் சேதுபதியின் நடிப்பு மிகச் சிறப்பு.

சிரஞ்சீவியின் எதிரியாக அறிமுகமாகி உற்ற நண்பனாக மாறும் சுதீப்பும் கவனத்தை ஈர்க்கிறார்.

ஜெகபதி பாபு, நாசர், ரவி கிஷன், ரோகிணி ஆகியோருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழில் வசனங்கள் எழுதிய விஜய் பாலாஜிக்கு பாராட்டுகள். கமல்ஹாசனின் குரலும் அனுஷ்காவின் சிறப்பு தோற்றமும் சிறப்பு.

1700களின் காலகட்டத்தை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார். போர்க்கள காட்சிகள் பாகுபலியை நினைவுபடுத்தும் அளவுக்கு பிரம்மாண்டம். அமித் திரிவேதியின் இசையில் டைட்டில் பாடல் உத்வேகம் அளிக்கிறது. ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த பலம்.

கலை இயக்கம், உடைகள், மேக்கப், ஒலி வடிவமைப்பு, கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தி பளிச்சிடுகிறது.

வரலாற்று படமான ‘சைரா நரசிம்மா ரெட்டி’ சினிமா வரலாற்றில் வரலாறு படைக்கும் என்பது உறுதி.