‘மிஸ்டர் சந்திரமௌலி’ மூலம் பாடகியாக அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை..!

திரையுலகில் நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, முதன்முதலில் நடைபெறும் பிரமாண்ட சினிமா விழா என்றால் அது நாளை (ஏப்-25) நடைபெற இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா தான்..

திரு டைரக்சனில் கௌதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார்.. இந்தப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ன.. இந்தப்பாடல்கள் பட்டியலை உன்னிப்பாக கவனித்தால் ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் மறைந்துள்ளது தெரியவரும்…

ஆம்.. நடிகர் சிவகுமாரின் மகளும், சூர்யா-கார்த்தி ஆகியோரின் சகோதரியுமான பிருந்தா சிவகுமார் இந்தப்படத்தில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இதில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸுடன் இணைந்து ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற பாடலை பாடியுள்ளார் பிருந்தா.

இதுநாள்வரை நடிகர் சிவகுமார் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்குள் நுழையாமல் ஒதுங்கி இருந்தவர் என்றால் அது பிருந்தா சிவகுமார் தான். இயல்பிலேயே நல்ல குரல்வளம் மிக்க பிருந்தா, தனது அண்ணன்கள் சூர்யா கார்த்தி போலவே முறைப்படி சங்கீதம் பயின்றவர்..

தற்போது சூர்யா-கார்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தால், பாடகியாக மாறி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் பிருந்தா. அதுமட்டுமல்ல, தந்தையைப்போலவே ஓவியம் வரைவதிலும் இவர் வல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.