தடைக்கல்லை படிக்கல்லாக்கி 20 வருடங்களை கடந்த சூர்யா..!

சிவகுமாரின் மகன் சூர்யா என்று சொல்கிற தலைமுறை மாறி, இன்று சூர்யாவின் தந்தை சிவகுமார் என சொல்லவைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறார் என்றால் அதில் சூர்யாவின் 20 வருட கடின உழைப்பு ஒளிந்திருக்கிறது. வெற்றி தோல்விகள் என இரண்டு அனுபவங்களையும் ஒரேபோல எடுத்துக்கொண்டு தடைக்கற்களை படிக்கற்களாக்க மாற்றிக்கொண்டதால் தான் சூர்யாவின் இந்த ஓட்டம் இருபது வருடங்களாக நிற்காமல் ஓடுகிறது..

இந்த நேரத்தில் தனது வளர்ச்சிக்கும் இந்த உயரத்திற்கும் காரணமாக இருந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சூர்யா. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது..

“என்னுடைய கடந்த 20 வருட சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பது தான். உங்களுடைய கரகோஷங்கள் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்தது….உங்களுடைய பாராட்டுக்கள் என்னுடைய தரத்தை உயர்த்திக்கொள்ள உதவியாக இருந்தது…. நீங்கள் தப்பு என்று எனக்கு சுட்டிக்காட்டிய விஷயங்கள் எனக்கு நல்ல படிப்பினையாக இருந்தது…. உங்கள் ஆதரவு என்னை சினிமாவை தாண்டி பயணிக்க வைத்தது (அகரம் பவுண்டேஷன் )… எல்லாவற்றையும் தாண்டி உங்கள் அன்பு தான் என்னுடைய என்ஜின் வேகமாக ஓட முக்கிய காரணம்… என்னுடைய கடந்த 20வருட பயணத்தை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இன்னும் பல மைல்கள் தாண்டி பயணிக்க வேண்டியுள்ளது… அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார் சூர்யா.