“யாராலும் மிஞ்ச முடியாத அழகான கூட்டணி” – சுதா கொங்கரா சூட்டிய புகழாரம்

ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” (Enjoy Enjaami) பாடல் ‘தீ’ குரலில் மற்றும் ‘அறிவு’ வரிகளில் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலை சமீபத்தில் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் பா.ரஞ்சித், சுதா கொங்கரா, மாரி செல்வராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் தேவா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது, “தீ மிக அற்புதமான திறமை கொண்ட கலைஞர். வரிகளை பாடலாக தன் குரலில் கொண்டு வருவதில் தனித்துவமான திறமை கொண்டவர். ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தாலும் அவரின் தமிழ் உச்சரிப்பு அனைவரும் பிரமிக்கும் வண்ணம் உள்ளது. அறிவு மற்றும் தீ இருவரும் இப்பாடலில் வியத்தகு பணியினை செய்துள்ளார்கள். அனைத்து தரப்பிலிருந்தும் விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களை வந்தடையும். சந்தோஷ் நாராயணன் இவர்கள் இருவரையும் இப்பாடலுக்கு அழைத்து வந்திருப்பது மிகச்சிறப்பானது. அவர்கள் இருவரையும் போலவே இவரும் பெரும் திறமைசாலி. மிகப்பெரும் உயரத்தில் இருந்தாலும் எளிமையாக இருக்க கூடியவர். ஏதாவது குக்கிராமத்திலிருந்து திறமைசாலிகளை நான் அறிமுகப்படுத்தினாலும் அவர்களின் திறமையை மதித்து உடனடியாக பயன்படுத்துவார்” என பாராட்டினார்..

இயக்குநர் சுதா கொங்குரா பேசும்போது, “நாங்கள் ஒரு முக்கியமான பாடலை பதிவு செய்யும்போது ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் குரலை தேடிக்கொண்டிருந்தோம். சந்தோஷ் நாராயணன் அப்போது தான் தீ அவர்களின் திறமையை அறிமுகப்படுத்தினார். அவரும் அற்புதமாக பாடித்தந்தார். இப்போது கூட “சூரரை போற்று” படத்தில் “காட்டுப் பயலே” பாடலில் பிரமாதப்படுத்தியிருந்தார். சந்தோஷ் நாராயணன், அறிவு மற்றும் தீ கூட்டணி யாராலும் மிஞ்ச முடியாத அழகான கூட்டணி” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “அறிவு போன்ற நன்கு அறிந்த கலைஞருக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வருகிறது. கற்பனை செய்து பாருங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயாதீன கலைஞர்கள் உள்ளனர், அவர்கள் அங்கீகாரங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

இப்போது நாங்கள் பல கிராமங்களையும் நகரங்களையும் பார்வையிடத் தொடங்கியுள்ளோம். அவர்களின் ஆத்மார்த்தமான படைப்புகளை ரசிப்பதை விட, அந்த கலைஞர்களின் திறமைகளை முன்பே காட்சிப்படுத்தாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்க விரும்பினேன். தீ ஒரு திறமையான கலைஞர். புதிய இசையை ஆராய்வதற்கான எனது லட்சிய உந்துதலின் பின்னால் உள்ள உத்வேகம் ரஞ்சித் தான்” என்றார்.