ஸ்ட்ராபெரி – விமர்சனம்

கால் டாக்ஸி ட்ரைவரான பா.விஜய்யை ஆவிகளுடன் பேசும் ஜோ மல்லூரியும் அவரது மகள் அவனி மோடியும் சேர்ந்து ஒரு ஆவி அவருடன் பேச விரும்புவதாக கூறி தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.. அது பள்ளிக்கூட பஸ் விபத்தில் இறந்துபோன குழந்தையின் ஆவி என்பது தெரிய வருகிறது.

சமுத்திரகனி, தேவயானியின் மகளான அந்த குழந்தை இறக்கும் முன் கடைசியாக பார்த்தது பா.விஜய்யை தான் என்பதால் அவர் மூலமாக தனது சாவுக்கு காரணமான அலட்சியத்துக்கு சொந்தக்காரரான பள்ளி ஓனரை பழி வாங்க நினைக்கிறது. ஆனால் அந்த ஆவியை அடக்கி தன்வசப்படுத்தி, அந்த பள்ளி ஓனரை காப்பாற்ற பல கோடி பணம் வாங்குகிறார் ஜோ மல்லூரி..

இந்த விஷயம் பா.விஜய்க்கு தெரியவர, குழந்தையின் ஆத்மா ஜோ மல்லூரியிடம் அகப்பட விடாமல் குறிப்பிட்ட தினத்திற்குள் அந்த கயவர்களை எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

நடிகராக மாறிய பா.விஜய் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியிருக்கிறார். தாம்பரம் பகுதியில் பள்ளி பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து இறந்த நிகழ்வை கையில் எடுத்து, அதற்கு சமூக விழிப்புணர்வுடன் கூடிய ஆவி கோட்டிங் கொடுத்து ஒரு இயக்குனராகவும் நம்மை மிரட்ட முயற்சித்திருக்கிறார் பா.விஜய்.

கால் டாக்ஸி ட்ரைவராக பா.விஜய் ஒகே என்றாலும் அவரது நடிப்பில் இன்னும் செயற்கை தன்மை மாறாமல் இருப்பது அவரது கதாபாத்திரத்தின் மீதான அழுத்தத்தை குறைத்து விடுகிறது.. மகளை விபத்தில் பறிகொடுத்துவிட்டு பள்ளி நிர்வாகத்துடன் போராடும் ஒரு யதார்த்த தந்தையாக ஹீரோயிசம் எதுவும் காட்டாமல் நடித்துள்ளார் சமுத்திரகனி.

கதாநாயகியாக வந்து காரியம் சாதிப்பதர்காக் பா.விஜய்யை சூடேற்றும் அவனி மோடி அந்த கேரக்டரில் ஒகே தான். மகளை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக தேவயானி கச்சிதம். துறுதுறு குழந்தையாக நடித்திருக்கும் யுவினாவுக்கு சுற்றிப்போட வேண்டும் அளவுக்கு க்யூட் பேபி. இன்னொரு கால் டாக்ஸி ட்ரைவராக வரும் ரோபோ ஷங்கரும் கிச்சு கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஜோ மல்லூரி தவிர அந்த ஆவி மீடியம் கேரக்டரில் யார் நடித்திருந்தாலும் சிறப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது.

பின்னணி இசையில் தாஜ்நூர் விளையாட முயற்சி செய்திருக்கிறார். குழந்தைகளின் பாதுகாப்பில் விழிப்புணர்வு தேவை என்பதை சொன்னதற்காக் பா.விஜய்யை பாராட்டலாம். ஆனால் அதை நேரடியாகவே சொல்லாமல் ஆவி, மீடியம் என தலையை சுற்றியிருக்கவேண்டுமா என்கிற கேள்வி எழவே செய்கிறது..