மகன் திருமணம் – ரஜினியை நேரில் சென்று அழைத்த டி.ஆர்

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, பாண்டிராஜ் இயக்கினார். நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.

2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்தப் படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமானது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத்.

இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் நடைபெறுகிறது. இத்திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்து வருகிறார் டி.ராஜேந்தர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று தனது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வைத்தார் டி.ராஜேந்தர்.