மனிதரில் புனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

பொதுவாக திரையுலகத்தை பொறுத்தவரையில் எந்த ஒரு நட்சத்திரத்தையும் பற்றிய மக்களின் கணிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் இருக்கும்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல் இன்று அறிமுகமான நடிகர் வரை ஆஹா, ஓஹோவென அவர்களது வீரதீர பராக்கிரமங்களை ஒருபக்கம் பட்டியலிட்டாலும் இன்னொரு பக்கம் அவர்களைப்பற்றிய எதிர்மறையான விஷயங்களையும் இட்டுக்கட்டி பேசுவதை காணமுடியும்..

 

ஆனால் தமிழக மக்கள் அனைவர் மனதிலும் ஒரே ஒருவரைப்பற்றி அன்றும் இன்றும் ஒரே மாதிரியான நல்ல அபிப்ராயம் மட்டுமே இருக்கிறது என்றால் அது கலையுலக மார்கண்டேயன் சிவகுமார் ஒருவர் மீது மட்டும்தான் என்பதில் இன்னொரு மாற்றுக்கருத்தே இல்லை. ஓவியம் பயில்வதற்காக சிவகுமார் சென்னைக்கு புறப்பட்டபோது, “குடும்பத்தை எதிர்காலத்தில் தூக்கி நிறுத்துவேன். புகை, மது, மாது, சூது பக்கம் நெருங்கமாட்டேன்” என்று தனது அம்மாவிடம் அவர் செய்து கொடுத்துவிட்டு வந்த சத்தியமும் இன்றுவரை அதைக் காப்பாற்றுவதும் தான், அவரை மனிதரில் புனிதராகவே வாழச்செய்து வருகிறது..

 

தமிழ் திரையுலகில் மார்கண்டேயன் என்றால் அது நடிகர் சிவகுமாருக்கு மட்டுமே சொந்தமாகிப்போன பெயராகும்.. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் அவரது தோற்றம் அன்று கண்டதுபோல இன்றுவரை எந்தவித மாற்றமும் இல்லாமல் பொலிவுடன் இருப்பது தான் இந்தப்பெயர் அவருக்கு சூட்டப்பட காரணம்.

 

மேலே கூறியபடி அவரது அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி வாழ்ந்ததும் தனது தேகத்தின் மீது அவர் செலுத்திய அக்கறையும் தான் அதற்கு காரணம். சென்னைக்கு வந்து யோகாசனம் பயில ஆரம்பித்தபின், காபி, டீ குடிப்பதைக்கூட நிறுத்திகொண்டவர், அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரம், 38 வகையான ஆசனங்கள் செய்வார் என்றால் அவரது உடலும் மனமும் எத்தகைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை..

 

அவரது அம்மா அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். அவரது பாக்கெட்டில் எப்போதும் 4 அணா மட்டுமே இருக்கும். அதுவும் சைக்கிள் பஞ்சராகிவிட்டால் ஓட்டுவதற்கு. சென்னையில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகாபலிபுரம் சென்று, 2 நாள் தங்கி ஓவியம் தீட்டுவார். பிறகு அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் சென்று 2 நாள் தங்கி ஓவியம் வரைவார்.

 

பின்னர் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல்பட்டுக்கு சென்றுவிட்டு, 45 கிலோ மீட்டர் பயணம் செய்து, சென்னைக்கு திரும்புவார்.. அவர் 10ஆம் வகுப்பு படிக்கும் போதே, ஒருநாளில் 180 கிலோ மீட்டர் சர்வ சாதாரணமாக சைக்கிளில் பயணம் செய்தவர்..

 

சினிமாவில் நுழைய ஆசைப்பட்டாலும் அன்றைய நிலவரப்படி, திரைப்படம் பார்ப்பதற்கு அவர் ஒதுக்கிய மாத பட்ஜெட் வெறும் 3 ரூபாய் தான். எந்த தியேட்டருக்கு போனாலும் 84 பைசா டிக்கெட்டுதான் எடுப்பார். அந்த டிக்கெட் கவுண்டரை மூடிவிட்டால், அதிக கட்டணத்தில் படம் பார்க்காமல். வீட்டுக்குத் திரும்பிவிட்டு, மறுநாள் அரைமணி நேரம் முன்னதாகச் சென்று, 84 பைசா டிக்கெட் எடுத்து தான் படம் பார்ப்பார்.. படம் பார்ப்பதில் கூட ஒரு வரைமுறையை கடைபிடித்தவர் சிவகுமார்.

 

ஓவியனாக தான் வாழ்ந்த 7 ஆண்டுகளும், தனது வாழ்வின் வசந்தகாலம் என்பார் சிவகுமார்.. கன்னியாகுமரியில் இருந்து சண்டிகார் வரை, பிறகு அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா, மும்பை,டெல்லி, ஆக்ரா, ஐதராபாத், மைசூர், பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் முதலான இடங்களுக்கெல்லாம் சென்று ஓவியம் வரைந்து படிப்பை முடிக்க எனக்கான மொத்த செலவு 7 ஆயிரத்து 140 ரூபாய்தான்.

 

அன்று வரைந்த நூற்றுக்கணக்கான ஓவியங்களைத்தான் இன்று அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ஓவியக்கண்காட்சி மூலம் மக்களின் பார்வைக்கு கொண்டுவந்து அவரையும் அவர் வரைந்த ஓவியங்களையும் கௌரவப்படுத்தி உள்ளார்கள்.

 

1965ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஏ.வி.எம்.தயாரித்த ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகுமாருக்கு, திரையுலகில் கடந்த வருடம் பொன்விழா ஆண்டு என்றால் இந்தவருடம் அவரது வயதுக்கு வெள்ளிவிழா ஆண்டாகும். சிவகுமார் கிட்டத்தட்ட 193 படங்களில் நடித்துள்ளார் என புள்ளிவிபரம் சொல்கிறது. ஒவ்வொன்றிலும் விதவிதமான கதாபாத்திரங்கள், ஏன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடித்து தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

 

2001ல் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்ததோடு தனது நடிப்பு பயணத்தை நிறுத்திக்கொண்ட சிவகுமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல ஏழை மாணவர்களுக்கு உதவும் விதமாக அகரம் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையை நிறுவி 35 வருடங்களாக மிகப்பெரிய கல்விச்சேவையும் ஆற்றி வருகிறார்.

 

மாணவர்களின் மேல் இவர் தனி அன்பு செலுத்துவதற்கும், வறுமை அவர்களின் கல்விக்கு ஒரு தடையாக இருந்துவிட கூடாது என்பதற்காக அவர் உதவி வருவதும் இன்று நேற்றல்ல, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் அவர் நடித்த காலத்திலேயே அவர் ஆரம்பித்துவிட்ட செயல் அது.. அதற்கு ஒரு சின்ன உதாரணத்தை மட்டும் பார்ப்போமா..?

 

1979ல் சிவகுமாரின் நூறாவது படம் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” வெளியான சமயம். படமும் நன்றாக ஓடி நல்ல வசூலையும், பேரையும் அப்படக்குழுவிற்கு அள்ளித்தந்தது. ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் நூறாவது நாள் வெற்றிவிழாவிற்கு எப்படியாவது எம்.ஜி.ஆரை தலமையேற்கச் செய்யவேண்டும் என்பதே சிவகுமாரின் விருப்பம்.

 

அதேவேளையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நல்லமதிப்பெண் எடுத்த மாணவர்கள் பத்துபேருக்கு அவரவர் அம்மாவின் பேரிலேயே பணத்தை டெபாஸிட் செய்துவிட்டு அதன்மூலம் வருகின்ற வட்டிப்பணத்தை எடுத்து மாணவர்களின் படிப்புச்செலவிற்கு உபயோகப் படுத்திக்கொள்ளலாம், என்ற திட்டத்தை வெற்றிவிழாவில் அறிமுகப்படுத்த வேண்டும், என்ற யோசனையிலும் சிவகுமார் இருந்தார்.

 

இந்தவிஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் தாய்மார்கள் மீது அளவற்ற மதிப்பு வைத்திருந்த எம்.ஜி.ஆர் உடனே மறுப்பின்றி ஒத்துக்கொண்டார். எம்.ஜி.ஆர் முதல்வரான பின் யாராலும் அவரை அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது.. ஆனால் சிவகுமார் அழைத்ததுமே அவர் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டு வரவைத்தது தன்னைப்போலவே சிவகுமாரிடம் இருந்த உதவும் குணம்.. குறிப்பாக மாணவர்களின் கல்விக்காக உதவும் குணம் தான்.

 

புதிதாக திரையுலகில் நுழையும் நடிகர்கள், நடிப்புக்காக சினிமாவில் யாரை வேண்டுமானாலும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டாலும், எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவர் என்றால் அதில் முதலிடத்தில் சிவகுமார் மட்டுமே.. இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடும் மனிதரில் புனிதர் சிவகுமார் அவர்களுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.