பல கோடி வருமானத்தை ஒதுக்கும் அளவுக்கு சிவகார்த்திகேயன் மனதை மாற்றிய வேலைக்காரன்..!

velaikaran audio

மோகன்ராஜா டைரக்சனில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் டிச-22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் முன்னோட்டமாக நேற்று இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தியுள்ளார்கள்.. இந்தப்படம் குறித்தும், படம் தனக்குள் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் சிவகார்த்திகேயன் உணர்ச்சி பொங்க சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

“தனி ஒருவன் படம் பார்த்துவிட்டு, நேரில் சென்று மோகன் ராஜா சாரை சந்தித்து, உங்களுடன் படம் பண்ணவேண்டும், நல்ல வாய்ப்பு வரும்போது கூப்பிடுங்கள் நான் காத்திருக்கிறேன் என்று நானே அவரிடம் கேட்டேன். அது இவ்வளவு சீக்கிரம் அமையும் என நான் எதிர்பார்க்கவில்லை. ரஜினி சார் பட தலைப்பில் நடிக்க ரொம்பவே யோசித்தேன். ஆனால் படத்திற்கு இதுதான் பொருத்தமான தலைப்பு என படம் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள்.

நடிகர் பஹத் பாசில் ஒரு இண்டர்நேஷனல் நடிகர். அவர் இந்தப்படத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த பெருமை. அனிருத் இல்லைன்னா சிவகார்த்திகேயன் இல்லைனு டுவிட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மை, அதை கேட்கும்போது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. என்மீது அளவற்ற அன்பை காட்டிவரும் ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசாக இந்த வேலைக்காரன் இருக்கும்” என கூறிய சிவகார்த்திகேயன் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த விழாவில் வெளியிட்டார்.

“நான் இதுவரைக்கும் ஒரேயொரு விளம்பர படத்தில்தான் நடிச்சுருக்கேன். இனிமேல் எந்த விளம்பரப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்கு காரணம் வேலைக்காரன் படத்தின் கதைதான். இது குறித்து நான் அதிகம் விளக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். விளக்கினால் கதையை சொன்ன மாதிரி ஆகிவிடும். படம் வந்த பின்பு நான் ஏன் இப்படியொரு முடிவெடுத்தேன் என்பது உங்களுக்கே தெரியும்” என்றார் சிவகார்த்திகேயன்.