ரஜினி முருகன் வெற்றிக்கு சிவகார்த்திகேயன் நம்பும் சில விஷயங்கள்..!

sivakarthikeyan
தடைகள் பல கடந்து வரும் டிச-4ஆம் தேதி ரஜினி முருகன் படம் வெளியாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை போன்றாம் இயக்கியுள்ளார். இந்த நிலையில் படம் குறித்தும் அதன் வெற்றிக்கான அறிகுறிகள் குறித்தும் சிவகார்த்திகேயன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்தப்படத்தில் டி.இமான் இசையில் ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா’ பாடல் பல மாதங்களுக்கு முன்பே ஹிட்டாகிவிட்டது. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் அரபு ஷேக் ஒருவர் இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பதை ரசித்து கொண்டிருப்பதை பார்த்த சிவகார்த்திகேயன் இந்தப்பாடலின் ரீச் குறித்து ஆச்சர்யப்பட்டாராம்.

அதேபோல ரஜினிமுருகன் என்கிற டைட்டிலே படத்திற்கு மாபெரும் பலம் என நினைக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் ரஜினி சாருக்கு பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்பதால் தான் எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர் என நம்புகிறார் சிவகார்த்திகேயன்.

பெண்கள், குழந்தைகள் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தில் நான் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை என்கிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி “இதற்கு முன் நான் நடித்த எந்த திரைப்படத்திலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தேவைப்படவில்லை.. அதனால் தவிர்த்திருக்கிறேன் அத்துடன் அதுபோன்ற எண்ணமும் எனக்கு கிடையாது” என்கிறார் ஆணித்தரமாக.

“என்னை ரசிப்பவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக இருப்பதால் அவர்களை மதித்து அவர்கள் ரசிக்கும் விதமாக தான் காட்சியமைத்து இருக்கிறோம். இந்த படத்தில் மதுரையின் மண்வாசனை மாறாமலும் அதே நேரத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமத்தின் கொண்டாட்டமான தருணத்தை நகைச்சுவையாகவும் தந்துள்ளோம். படத்தை பார்த்து மக்கள் தான் எப்படி இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும்” என்கிறார் சிவகார்த்திகேயன் நம்பிக்கையுடன்.