ரஜினி ரசிகர்களின் நீண்டநாள் மனக்குறையை போக்க வருகிறார் எஸ்.பி.பி

spb

ரஜினிகாந்த் படங்களில் அவரது ரசிகர்கள் ஸ்டைல், ஆக்சன், பன்ச் டயலாக், உள்ளிட்ட பலவற்றை எதிர்பார்ப்பார்கள் என்றாலும் அவர்களது முக்கிய விருப்பம் ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் அறிமுகப்பாடல் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அண்ணாமலையில் வந்தேண்டா பால்காரன் பாடஷாவில் நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், முத்துவில் ஒருவன் ஒருவன் முதலாளி, படையப்பாவில் என் பேரு படையப்பா சந்திரமுகியில் தேவுடா தேவுடா என பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் அந்த பாடல்களை பெரும்பாலும் எஸ்.பி. பாலசுப்ரமணியமே பாடியிருப்பார்.

சொல்லப்போனால் ரஜினி ரசிகர்களை உற்சாகமாக அந்தப்படத்திற்குள் நுழைய வைப்பதே அந்த அறிமுகப்பாடலாகத்தான் இருக்கும். காரணம் எஸ்.பி.பியின் குரல் என்பது ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை ரஜினியின் குரலாகவே ரசிகர்களின் செவிகளில் புகுந்து மனதில் தங்கிவிட்ட ஒன்று.

எவ்வளவுதான் பிரமாண்டமாக படம் எடுத்தாலும் இயக்குனர் ஷங்கர் கூட, ரஜினிக்கு ஓப்பனிங் ஷாங் வைக்க தவறியதே இல்லை.. ஆனால் அண்மைக்காலமாக ரஜினியின் படங்களில் அறிமுகப்பாடல் இல்லாமல் போய்விட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடவுள்ளார். ஆம் கார்த்திக் சுப்புராஜ் டைரக்சனில் ரஜினி நடித்து வரும் படத்தில் மீண்டும் ரஜினி-எஸ்.பி.பி மாயாஜாலம் நடக்க இருக்கிறது. இந்தப்பாடலுக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். . சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது.