ஏப்ரல்-25ல் சிம்பு படத்தை ஆரம்பிக்கிறார் செல்வராகவன்..!

சினிமாவில் ரொம்ப வருஷமாகவே ஒரு எழுதப்படாத விதியை கடைபிடித்து வருகிறார்கள் சில இயக்குனர்களும் நடிகர்களும் கூடவே சில தயாரிப்பாளர்களும். எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்த தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சிவாஜியை வைத்து ஒரு படம்கூட தயாரித்ததில்லை. அதேபோல பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜி, சிவாஜியை வைத்து பல படங்களை தயாரித்தாரே தவிர எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கவேயில்லை.

மறைந்த நடிகர் ரகுவரன் கமல் படங்களில் நடிக்காமல் போனதும், நகைச்சுவை நடிகர் விவேக் இந்த 25 வருடங்களில் இதுவரை கமலுடன் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்காததும் இதுபோலத்தான். இவர்கள் யாரும் ஒருவருக்கொருவர் எதிரிகளும் அல்ல. சில விஷயங்கள் நடக்காததற்கு காரணங்களை சொல்ல முடியாது. அல்லது இது ஏதேச்சையாக கூட இருக்கலாம்.

எதற்கு இவ்வளவு பில்ட் அப் என்றால் தற்போது நடக்கும் நிகழ்வும் அவ்வளவு ஆச்சர்யமானது தான். சூரியன் மேற்கே உதிப்பதற்கு சமமானது. ஆம்.. செல்வராகவன் டைரக்‌ஷனில் சிம்பு நடிக்கிறார் என்றால் உண்மையிலேயே மிக ஆச்சர்யமான கூட்டணி தான்.

சினிமாவில் இரண்டு விஷயங்கள் நடக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஒன்று கௌதம் மேனன் படத்தில் தனுஷ் நடிப்பது.. இன்னொன்று செல்வராகவன் படத்தில் சிம்பு நடிப்பது.. இதோ இப்போது இரண்டாவது விஷயம் நடந்தே விட்டது.

காரணம் சினிமாவைப் பொறுத்தவரை தனுஷும் சிம்புவும் எதிர் எதிர் துருவங்கள்.. கடுமையான சக போட்டியாளர்கள். இந்த சூழ்நிலையில் தனுஷின் அண்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது உண்மையிலேயே ஆச்சர்யம் இல்லாமல் வேறென்ன?.

இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. ‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வை தொடர்ந்து இவர்கள் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது.

இந்தப்படத்தை வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பை ஏப்ரல்-25ல் துவங்க இருக்கிறார் செல்வராகவன். சிம்புவை வைத்து தான் முதன்முதலாக இயக்குவதால் படத்தின் வெற்றிக்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் செல்வராகவன் கையாளுவார் என எதிர்பார்க்கலாம்.