சிம்பு பாடல் வரியையே டைட்டிலாக்கிய மகத் ராகவேந்திரா..!

பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்களை உடனடியாக கவர்ந்திருக்கிறது. சிம்பு நடித்த ஒரு வெற்றி படத்தின் புகழ்பெற்ற பாடல்களில் இருந்து ஈர்க்கப்பட்ட ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ என்கிற ஒரு வரியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் மகத்.

நகர்ப்புற பின்னணியில் உருவாகும் ரொமாண்டிக காமெடி படமான இது அனைவரையும் வசீகரித்துள்ளது. இந்த படத்தில் சிம்புவின் தீவிரமான ரசிகராகவும் நடித்திருக்கிறார் மகத். கடந்த மாதம் பூஜையுடன் துவங்கிய இந்த படம், தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று மாலை ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ என்ற தலைப்பை மகத் ராகவேந்திரா வெளியிட்டார்.

இயக்குனர் பிரபுராம் சி கூறும்போது, “மகத் ஒரு வட சென்னை இளைஞராக, சிம்புவின் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். உண்மையில், அவர்கள் இருவரின் நட்பு மக்களுக்கு தெரிந்தது, அது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நான் நினைத்தேன்” என்றார்.

சிம்புவின் ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த தலைப்பு வைக்கப்பட்டதா என்பது குறித்து அவர் பதிலளிக்கும்போது, இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும். இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்” என்றார். இந்தப்படத்துக்கு தரண் இசையமைத்துள்ளார்.