“சிம்பு வருடத்திற்கு 2 படம் கொடுக்கவேண்டும்” ; சந்தானம் பட விழாவில் தனுஷ் கோரிக்கை..!

சிம்பு தனுஷ் இணைந்து ஒரு விழாவில் பங்கேற்கிறார்கள் என்றால் தமிழ் சினிமாவில் அதுதான் ஹைலைட்டான விஷயமாக இருக்க முடியும். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த அதிசயம் நடந்தது.

சிம்பு இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தனுஷ் சிம்பு பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டதுடன் அவருக்கு ஒரு கோரிக்கையும் வைத்தார்.

“கடந்த 2002ம் ஆண்டு நானும், சிம்பும் ஹீரோவாக அறிமுகமானோம். ஆனால், அதற்கு முன்னதாக 3 வயதிலிருந்தே நடிச்சிட்டு இருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக நடித்ததில் இருந்து எங்களது நடிப்பை ஒப்பிட்டு வருகிறார்கள். இருவருக்குமே வெற்றிகள், தோல்விகள், விமர்சனங்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது எளிது தான். ஆனால், நிலைத்து நிற்பது தான் கஷ்டம். ஆனால், சிம்பு வந்து 15 வருடம் ஆகிவிட்டது. இன்னும் சினிமாவில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்.

நான் பிடிக்காமல் தான் துள்ளுவதோ இளமை ஷூட்டிங்கிற்கு சென்றேன். அப்போது, எனக்கு டான்ஸ் மாஸ்டர் அசோக் ராஜன் ஆட சொல்லிக் கொடுப்பார். அப்போது எல்லாம் எனக்கு ஆடவே வராது. ஆனால், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன்.

அப்போது அசோக்கும், ரஞ்சித்தும் சுக்குமலா, சுக்குமலான்னு பேசிக்கிட்டு இருந்தார்கள். நான் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பாடலை பாருங்க…அது மாதிரி தான் ஆட வேண்டும் என்று சொன்னார்கள். அதனைப் பார்த்த நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். இவரு என்ன இப்படி ஆடுறாரு. என்னால், இது மாதிரி ஆட முடியாது என்று கூறியுள்ளார். அப்போது மட்டுமில்லை. இப்போதும் என்னால் சிம்பு மாதிரி டான்ஸ் ஆடவே முடியாது. இதை நான் சிம்பு வரை கூறியது இல்லை. இப்போது தான் முதல் முறையாக உங்கள் முன் இதனை தெரிவிக்கிறேன்.

சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் சார்பில் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். குறைந்தது வருடத்திற்கு இரண்டு படங்களாவது கொடுக்கவேண்டும். சிம்பு இசையமைத்தால் நான் பாடுவேன். ஆனால், இந்தப் படத்திற்கு அவர் தான் இசையமைத்திருக்கிறார். என்னை அழைக்கவே இல்லை

எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த பிரச்னையுமில்ல. ஆனா இடையில இருந்த சிலபேர்தான் அப்படியெல்லாம் ஒரு மாயையை உருவாக்கினாங்க. இந்த நேரத்துல அதைப்பத்தி பேசவும் நான் விரும்பல. நம்மளோட வெற்றி சமயங்கள்ள நம்ம கூட இருக்கிறவங்களை உண்மையான நண்பர்கள்னு சொல்லிட முடியாது. ஆனா நம்முடைய கடினமான நேரத்துல நம்ம கூட இருக்கிறவங்கதான் உண்மையான நண்பர்கள்.

எல்லார் படத்தையும் எல்லாரும் பார்க்கணும். இன்னைக்கு இந்த திரைத்துறை தேய்ஞ்சுகிட்டிருக்கு. இதை எல்லாரும் சேர்ந்து காப்பாத்தணும். இன்னைக்கு உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு. யாருக்கும் யாரும் நல்லாருக்கிறது பிடிக்கலை. இதெல்லாம் வேணாம். அவங்கவங்க உழைக்கிறாங்க, அவங்கவங்க நல்லா இருக்கிறாங்க. அதனால வாழுங்க, வாழ விடுங்க. யாரு யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்ல. ஒருத்தரை பிடிச்சிருந்தா கொண்டாடுங்க, பிடிக்கலையா தள்ளிப்போங்க. சிம்பு ரசிகர்களின் அன்பை பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்குது” என பேசினார் தனுஷ்.

விடிவி கணேஷ் தயாரிப்பில், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் வரும் டிச-22ஆம் தேதி திரைக்கு வருகிறது.