இத்தனையும் தெரிந்தே தான் செய்கிறாரா சிம்பு..?

simbu

சிம்புவை பற்றிய எந்த பில்டப்பான முன்னோட்டத்திற்கும் போகாமல் நடப்பு விஷயங்களை மட்டுமே குறித்த ஒரு அலசல் தான் இந்த கட்டுரை…

2012ஆம் வருடத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தை அடுத்து அவர் நடித்த அடுத்த படமான வாலு’ ரிலீஸானது 2015ல் தான்.. கிட்டத்தட்ட 3 வருட இடைவெளி.. முன்பு எப்போதோ ஓரிருமுறை ரஜினி மட்டுமே தனது படங்களுக்கு இடையே இவ்வளவு பெரிய இடைவெளி விட்டார் என்பது சினிமா வரலாறு.. அதுகூட கொஞ்சம் ரிலாக்ஸாக நடிக்கலாமே என அவராகவே ஏற்படுத்திக்கொண்ட இடைவெளிதான்..

ஆனால் 33 வயதாகும் சிம்பு ரிலாக்ஸ் பண்ணுவதற்காக இடைவெளி விடும் காலகட்டத்திலா இருக்கிறார்..? போடா போடி ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட ‘வேட்டை மன்னன்’ படம் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.. போடா போடி, வாலு என சிம்புவின் படங்கள் தொடர்ந்து எவ்வளவோ இழுபறிகளுக்கு மத்தியில் தானே வெளியாகின்றன..?

புதிய காம்பினேஷன் என அனைவரும் வியந்து பாராட்டிய சிம்பு-நயன்தாரா-பாண்டிராஜ் கூட்டணியில் உருவான ‘இது நம்ம ஆளு’ படம் 2013ல் துவங்கப்பட்ட இந்தப்படம் இன்னும் வெளியாகு தேதியை உறுதியாக சொல்ல முடியவில்லை.. இத்தனைக்கும் இது சிம்பு குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள படம். அனால் அந்தப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், அடுத்து பசங்க-2, கதகளி என இரண்டு படங்களை ரிலீஸ் செய்துவிட்டு இதோ அடுத்த படத்திற்கான வேலைகளில் இருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.. ஆனால் என்ன ஆச்சு..? அதற்குப்பின் அந்தப்படத்திற்கு கொஞ்சம் ஒய்வு கொடுத்துவிட்டு ‘அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ என்கிற படத்தையே முடித்து அது ரிலீஸாகி 14 மாதங்களும் ஓடிவிட்டன. அடுத்ததாக தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார் கௌதம் மேனன்.

ஆனால் ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பு இன்னும் கூட முடிவடையவில்லை.. செல்வராகவன் டைரக்சனில் ‘கான்’ என்கிற படத்தில் நடக்க ஒப்பந்தமானபோது திரையுலகமே இந்த கூட்டணியை அதிசயமாக பார்த்தது.. ரசிகர்களுக்கு ஒரு புது ட்ரீட் என எதிர்பார்த்த வேளையில் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அதுவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் ‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்பது மட்டும் தான் அவரது அடுத்த பட தகவலாக இருக்கிறது.

சிம்புவின் படங்கள் ஓடுகிறதோ இலையோ, எப்போதுமே மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.. இப்போதும் கூட இருக்கிறார் தான்.. அதேபோல அவரது படத்திற்கு என்று இப்போதும் ஒரு பிசினசும் இருக்கவே செய்கிறது..

ஆனால் எந்தப்படதையுமே முழுதாக முடித்துக்கொடுக்காமல் சிம்புவை தடுத்து நிறுத்துவது எது..? இழுத்து பிடிப்பது யார்..? இந்த வயதிலும் கூட கடந்த ஒரு வருடத்தில் மட்டும், 60 வயதை தொட்ட கமலால் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என மூன்று படங்களை ரிலீஸ் செய்ய முடிகிறதே..? கடினமான ஆபரேஷன் ஒன்றை தாண்டியும் கூட, ‘லிங்கா’வை ரிலீஸ் செய்துவிட்டு, இப்போது ஒரே நேரத்தில் கபாலி, 2.O என ரஜினியால் காலில் றெக்கை கட்டி பறக்க முடிகிறதே.. இவர்களுக்கு சாத்தியமானது சிம்புவுக்கு மட்டும் ஏன் முடியாமல் போனது..?

2௦10குப்பிறகு விஜய் 10, அஜித் 7 படங்களை ரிலீஸ் செய்து விட்டார்கள். சிம்புவின்ன் சக போட்டியாளராக கருதப்படும் தனுஷ் 13 படங்களை கொடுத்துவிட்டார். ஆனால் சிம்பு..? வெறும் 4 படங்கள் மட்டுமே தந்திருக்கிறார். இத்தனை படங்களை கொடுப்பதற்கு சீனியர் முன்னணி நடிகர்களுக்கே சாத்தியமாகும்போது இளம் வயதில் உள்ள, மார்க்கெட் வேல்யூ உள்ள சிம்புவால் மட்டும் ஏன் இது முடியவில்லை என்பது தான் ஆச்சர்யம்..?

அவ்வளவு ஏன் இது நம்ம ஆளு படத்திற்கு பின் ‘பசங்க-2’வை முடித்துவிட்டுத்தா, விஷாலை வைத்து ‘கதகளி’ படத்தை ஆரம்பித்தார் பாண்டிராஜ்.. அந்த சமயத்தில் நடிகர்சங்க தேர்தல் விஷயமாக ரொம்பவே பிசியாகவும் கடும் மன உளைச்சளுடனும் இரவு பகல் என நேரம் காலம் பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்த விஷாலே, சொன்ன நேரத்தில் அந்தப்படத்தில் நடித்துக்கொடுத்து படத்தை ரிலீஸ் செய்தாரே..?

சிம்புவுக்கு அப்படி எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இருந்தும் கூட அவரது படங்களின் நிலை இப்படி இருக்கிறதென்றால் தவறு யார் மீது.?

இத்தனைக்கும் அஜித் விஜய்க்கெல்லாம் முன்னரே, அதாவது தான் பிறந்த அடுத்த வருடத்திலேயே சினிமாவில் நுழைந்தவர் தான் சிம்பு. இவரது தந்தை டி.ஆர், தனது படங்களை சொன்ன நேரத்தில் சொன்னமாதிரி ரிலீஸ் செய்து காட்டியவர்.. எந்தவித் சர்ச்சைகளிலும் சிக்காதவர்.. ஆனால் இந்த இரண்டையுமே சிம்புவால் பின்பற்ற முடியவில்லை..

சிம்புவின் பர்சனல் சர்ச்சைகளுக்குள் நாம் போக விரும்பவில்லை.. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்தால் சினிமாவில் நடிப்பதற்கான சிம்புவின் ஆர்வம் படிப்படியாக மங்கி வருகிறது என்றே தோன்றுகிறது.

இத்தனையும் தெரிந்தே தான் செய்கிறாரா சிம்பு..?