சித்தார்த் இப்படி செய்தது ஏன்..?

 

சித்தார்த்தை மன ரீதியாக சங்கடப்படுத்தும் சில பிரச்சனைகள் அவருக்கு இருக்கலாம். ஆனால் வெளியில் தெரிந்தவை என்று பார்த்தால் சமந்தாவுடனான காதல் விவகாரமும், அதுகுறித்து அவ்வப்போது மீடியாக்கள் கேட்கும் கேள்விகளும் தான். பெரும்பாலும் அவற்றுக்கெல்லாம் பொறுமையாகவே பதில் சொல்லியும் வந்தார் சித்தார்த்.

ஆனால் நேற்று அவர் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ஒரு நடிகை கதாபாத்திரம் மூலமாக தனது பேச்சை மீறி அந்த நடிகை நடிக்க ஒப்புக்கொண்டது போலவும், அதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படுவது போலவும் காட்சிகள் அமைந்திருந்தன.

அதுமட்டுமல்ல, படத்தில் சினிமா ஸ்டாராக நடித்திருக்கும் சித்தார்த், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது  தனது பெர்சனல் விஷயங்களை துருவித்துருவி கேட்கும் ஒரு பத்திரிகையாளரிடம் கோபப்பட்டு, அவருக்கு எரிச்சலூட்டும் விதமாக ‘தனது பெர்சனல் வாழ்க்கையை பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை” என காட்டமாக பதில் அளிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்த இரண்டு விஷயங்களும் ஏதேச்சையாக அமைந்ததா, அல்லது தன்னைப்பற்றி வெளியாகும் செய்திகளுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாகவும், தனது சொந்த வாழ்க்கை பற்றி யாரும் கேள்வி கேட்க தேவையில்லை என்று சொல்லும் விதமாகவும்  சூசகமாக காட்சிகளை வைத்திருக்கிறாரோ என எண்ணும்படியாக இருந்தது.. சித்தார்த் இப்படி செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.