சிபிராஜூக்கு கமலும் விஜய் ஆண்டனியும் தந்தது இதைத்தான்..!

sathya title

சிபிராஜ் நடித்துள்ள சத்யா’ திரைப்படம் வரும் டிச-8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சிபிராஜ் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“தெலுங்கில் வெளியான சனம் திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். ஷணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும், தங்கையும் படத்தை பார்த்தனர் அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி ஷணம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம்.

நான் ஷணம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன். இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார். அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாக காட்டவேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார்.

படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர சதீஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. யவனா பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலைவாங்கினார் இயக்குநர் பிரதீப்.

படப்பிடிப்பின்போது லிப்லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன், என்னை ரோல் மாடலாக பார்க்கிறான்… நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான். நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்சனை நமக்கு தான். அதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம்.

கதையில் கதாநாயகனின் பெயர் சத்யா என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டோம். இதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ‘சத்யா’ படத்தின் டைட்டிலை அவரிடம் கேட்டு முறைப்படி வாங்கி இந்த படத்துக்கு வைத்துள்ளோம்” என்றார் சிபிராஜ்.

இந்தப்படத்தின் டைட்டிலை கமலிடம் இருந்து வாங்கித்தருமாறு சிபிராஜ் கேட்க, அதற்கு கமலிடம் எப்படி கேட்பது என சங்கடப்படாராம் சத்யராஜ். அதனால் சிபிராஜே கமலுக்கு கடிதம் எழுதி அனுமதி கேட்க, எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதித்து விட்டாராம் கமல்.