ஜாக்கிரதையான வேகத்தில் ஏறுது சிபிராஜின் ரேட்டிங்..!

நாய்கள் ஜாக்கிரதை வெற்றிப்படத்தை கொடுத்து, இடையில் விட்ட இடைவெளியை வெற்றியால் நிரப்பி மீண்டும் சினிமா ரேஸில் தன்னையும் இணைத்துக்கொண்டு விட்டார் சிபிராஜ். அடுத்ததாக சூட்டோடு சூடாக இப்போது நடித்துவரும் ஜாக்சன் துரை படம் முடியும் தறுவாயில் உள்ளது.. தரணிதரன் (பர்மா) இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிந்துமாதவி நடிக்கிறார்..

இந்தப்படத்தில் சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப்படத்தை தெலுங்கில் கட்டப்பா என்கிற பெயரில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.. ‘பாகுபலி’ படம் மூலம் தமிழ், மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு கட்டப்பாவாகவே மாறிப்போன சத்யராஜ் பெயரையே இந்தப்படத்திற்கு வைத்திருப்பது பொருத்தமானது தானே..

இதை தொடர்ந்து ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ‘போக்கிரி ராஜா’ படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார் சிபிராஜ்.. ஜாக்சன் துரை படத்தில் நடிக்க 45 லட்சம் சம்பளமாக வாங்கிய சிபிராஜுக்கு, போக்கிரிராஜாவில் நடிக்க 60 லட்சம் பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது.

போக்கிரி ராஜாவை முடித்துவிட்டு இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ கூட்டணி மீண்டும் இணைந்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

தற்போது சிபியின் அடுத்த படமான ‘ஜாக்சன் துரை’ படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில், இதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்து அசந்துபோன ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கிவிட்டது.

இன்னும் படப்பிடிப்பு முடியாத நிலையிலேயே படத்தின் பிசினஸ் வேல்யூ எகிறியிருப்பதால் தான் போக்கிரி ராஜாவில் சிபிராஜின் சம்பளமும் கணிசமாக ஏறியுள்ளது. ஆக சிபிராஜின் சம்பள ரேட்டிங் ஜாக்கிரதையான வேகத்தில் தான் ஏறுகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.