புதிய தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் சிபிராஜ்..!

நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என புதிய கதைக்களங்களில் தனது பயணத்தை மாற்றிய சிபிராஜ், இனி தான் கவனமாக படங்களை தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை நன்றாகவே புரிந்துகொண்டு விட்டார்.. அதன் காரணமாகவே கதையில் மட்டுமல்ல, படத்தை தயாரிக்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதிலும் புதிய முயற்சியை கையாள்கிறார் சிபிராஜ்..

ஏற்கனவே தான் சொந்தமாக படம் தயாரித்த அனுபவத்தில் ஒரு தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை நன்கு உணர்ந்திருப்பவர் சிபிராஜ்.. அதேசமயம் அதன் லாப நட்டங்களையும் உற்று நோக்கியிருப்பவர். இருந்தாலும் தானே படங்களை தயாரித்துக்கொண்டு இராமல், நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அதேசமயம் புதிய தயாரிப்பாளர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியையும் சத்தமில்லாமல் ஆரம்பித்துவிட்டார்.

தற்போது மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கட்டப்பாவ காணோம்’ என்கிற படத்தில் சிபிராஜ் நடித்து வருகிறார். வாஸ்து மீன் என்கிற புதிய கதைக்களத்தில் உருவாகும் இந்தப்படத்தை தயாரிக்கும் ‘வின்ட் சிம்ஸ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இந்தப்படத்தை தயாரிப்பதன் மூலம் தான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது..

அதுமட்டுமல்ல, தனது அடுத்த படத்தையும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்திலேயே நடிக்க இருக்கிறார் சிபிராஜ்.. புதிய, இளைய தலைமுறை தயாரிப்பாளர்கள் சினிமாவிற்குள் வருவது ஆரோக்கியமான விஷயம் என்பதே சிபிராஜின் கருத்து. அதைத்தான் தற்போது செயலிலும் காட்டிவருகிறார் சிபிராஜ்.