சிபிராஜ் புண்ணியத்தில் ‘பெல்ஜியம் ஷெப்பர்டு’க்கு எகிறுது கிராக்கி..!

 

சிபிராஜ் நம்பிக்கையுடன் இருந்திருப்பார்.. ஆனால் நிச்சயம் இந்த அளவுக்கு எதிர்பார்த்திருக்க மாட்டார்.. அந்த அளவுக்கு ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் அவரது கேரியரை தூக்கி நிறுத்தியிருக்கிறது.. நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் சிபிராஜ் மட்டும் படு காஸ்ட்லியாக செலவு செய்து, அதன் மூலம் அதைவிட அதிகமாக சம்பாதித்த லாபத்திலும் புகழிலும் அந்த உண்மையை கண்ணார கண்டுள்ளார்.

மறைந்த இயக்குனர் ராம நாராயணனின் படங்களில் மிருகங்கள், குறிப்பாக நாய்கள் நடிக்கும்போது அவற்றின் மதிப்பு சமூகத்தில் இன்னும் அதிகமாகியது. இப்போது அதை இன்னும் ஒரு படி உயர்த்தி பிடிக்கும் விதமாக, மிகப்பெரிய கௌரவத்தை ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் நடித்த ‘ஈத்தோ’ என்கிற பெல்ஜியம் ஷெப்பர்டு நாய் பெற்றுத்தந்துள்ளது.

இந்தப்படம் வெளியான பின் குறிப்பாக பெல்ஜியம் ஷெப்பர்டு நாய்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. இந்த இனத்தை சேர்ந்த நாய்களை வாங்குவதில் நாய் வளர்ப்போரிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனாலேயே இந்த வகை நாய்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஜெர்மன் ஷெப்பர்டு நாய்களைப்போல அவ்வளவு எளிதில் இந்த பெல்ஜியம் ஷெப்பர்டு நாய்கள் கிடைத்துவிடுவதில்லை என்பது ஒரு காரணம் என்றால் படத்தில் இந்த நாய் செய்த குறும்புகளும் சாகசங்ககளும் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளது இன்னொரு காரணம்… அதனாலேயே இந்த நாய்களுக்கான டிமாண்டும் கூடியுள்ளது.

இதைவிட முக்கியமான விஷயமாக தமிழக காவல்துறை இந்த வகை நாய்களை தங்களது புலனாய்வுத்துறைக்கு பயன்படுத்தலாமா என ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இப்படி எகிறும் மதிப்புதான் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க சிபிராஜை தூண்டியுள்ளது.

2௦15 இறுதியில் இரண்டாம் பாகத்தை துவங்கி, 2௦16ல் வெளிடும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிபிராஜ். இதுதவிர ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்க சென்னையில் உள்ள மிகப்பெரிய திரைப்பட நிறுவனம் ஒன்றும், கன்னட ரீமேக் உரிமையை கைப்பற்ற ஸ்டுடியோ-9 சுரேஷும் முயற்சித்து வருகிறார்களாம்.