200 கோடி கிளப்பில் ‘சி-3’ இணைவது உறுதி ; ஸ்டுடியோகிரீன் திட்டவட்டம்..!

si 3 pressmeet

இயக்குனர் ஹரி-சூர்யா கூட்டணியில் ஐந்தாவது படமாகவும் ‘சிங்கம்’ வெற்றிப்பட வரிசையில் மூன்றாவது பாகமாகவும் உருவாகி இருக்கும் படம் தான் ‘சி-3’.. அனுஷ்கா உட்பட முதல் பாகத்தில் இடம்பெற்ற பலரும், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட புதியவர்களும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர்..

ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் கடந்த இரண்டு மாதங்களில் எதிர்பாராமல் ஏற்பட்ட சில இயற்கை தடைகளை தாண்டி, வரும் பிப்-9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.. இதுகுறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ‘சி-3’ படக்குழுவினர்.

படத்தின் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா பேசும்போது, “முதல் இரண்டு பாகங்களை தாண்டி இந்தப்படம் அருமையாக வந்துள்ளது.. எழுதி வைத்துக்கொள்ளுங்கள், நிச்சயம் இந்தப்படம் ரஜினி படத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடிக்கும் சாதனையை நிகழ்த்தும்.. காரணம் படத்திற்கான எதிர்பார்ப்பும் சூர்யாவுக்கு வலுவாக உள்ள பிசினஸ் மார்க்கெட்டும் தான்.. ஆந்திரா, தெலங்கானாவில் சூர்யாவின் படங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது” என்றார்.

ஸ்டுடியோகிரீன் நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருக்கும் சக்திவேலன் பேசும்போது, “இந்தப்படத்தின் பிசினஸ் ஏற்கனவே நூறு கோடியை தாண்டி விட்டது.. உலகெங்கிலும் இந்தப்படத்தை வாங்கி திரையிடுபவர்கள் ரிலீசுக்கு முன்பே லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. நிச்சயமாக இந்தப்படம் 200 கோடி கிளப்பில் இணைவது உறுதி.. அந்த அளவுக்கு படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இடம்பெற்றுள்ளன” என்றார்.

இந்த நிகழ்வில் சூர்யா பேசியதாவது ; “நான் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது, இதுவரை 35 படங்களில் நடித்துவிட்டேன். ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்கும்போது, எனக்காக துரை சிங்கம் என்றதொரு கதாபாத்திரத்தை உருவாக்குவார்கள் என நினைத்துப் பார்த்ததில்லை. என் திரையுலக வாழ்க்கையில் ‘சிங்கம்’ முக்கியமான படம்.

ஆனால் அந்தப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வெற்றியால் 3ஆம் பாகம் செய்யவில்லை. இந்தப்படத்திற்காகவும் இயக்குநர் ஹரி அதிகமாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பைத் தான் நான் மிகவும் வியந்து பார்க்கிறேன். இப்படத்துக்காக 120 நாட்கள் படப்பிடிப்பு, 200 படப்பிடிப்பு தளங்களில் காட்சிப்படுத்தியுள்ளோம். ஒரு இயக்குநரோடு 5 படத்தில் பணிபுரிந்துவுள்ளேன் என்பது எவ்வளவு அதிர்ஷ்டமான விஷயம்.. ஹரிக்கும் எனக்கு நல்ல நட்பு உள்ளது.

நேற்று தான் இந்தப்படத்தை என் அம்மாவுக்கு திரையிட்டு காட்டினேன்.. முதல் இரண்டு பாகங்களின் தீவிர ரசிகரான அவர், அவற்றை விட மூன்றாம் பாகம் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது என படம் பார்த்துவிட்டு பாராட்டியது என் மனதை தொட்டுவிட்டது..

கனல் கண்ணன் மாஸ்டரின் கைவண்ணத்தில் சண்டைக்காட்சிகள் புதிய பரிமாணத்தில் வந்திருக்கின்றன.. ஹாரிஸ் ஜெயராஜின் இசை பற்றி சொல்லவே தேவையில்லை.. கிட்டத்தட்ட அவருடன் பத்து படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.. ஹாரிஸ் ஜெயராஜ் எனது திரையுலக வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என்றே சொல்வேன்.

இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளேன். அதனால் ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.. ஜல்லிக்கட்டு விஷயத்தில் காவல்துறை மீது அதிருப்தி நிலவுகிறது என்கிறார்கள், சிலர் தவறு செய்திருக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கைகள் உண்டு என தெரிவித்துள்ளார்கள். அதற்காக ஒட்டு மொத்த காவல்துறையையும் குறைச் சொல்லக்கூடாது. சமூகத்தில் அவர்களுடைய பணி மிகவும் முக்கியம்” என்று பேசினார் சூர்யா.