பத்திரிகையாளர் தாக்குதல் விவகாரம் ; மன்னிப்பு கேட்டார் ஷங்கர்..!

shankar 1shan

ஷங்கர் படங்களின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றாலே அங்கே ஈ, காக்கா பறக்கவேண்டும் என்றால் கூட அதற்கு அனுமதி பெறவேண்டியது அவசியம்.. அவ்வளவு ஸ்ட்ரிக்ட்.. அதேசமயம் போக்குவரத்து நிறைந்த ஏரியாக்களில் அவர் படம் எடுக்கும்போது பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதையும் மறுப்பதற்கில்லை.

அப்படித்தான் நேற்று திருவல்லிக்கேணியில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘2.O’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்றன. அப்போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பத்திரிகையாளர்கள் சிலர் புகைப்படம் எடுத்தனர்.

அதைக் கண்ட படப்பிடிப்பு குழுவினர், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், ஷங்கரின் உறவினரும், அவரிடம் உதவி இயக்குனராக இருக்கும் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இயக்குநர் ஷங்கர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி,. அதில் தாக்குதல் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறினார். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் நடந்து கொள்வேன் என்றும் குறிப்பிட்டார். ஷங்கர் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து தாங்கள் தொடர்ந்த வழக்கை திரும்ப பெறுவதாக பத்திரிகையாளர்கள் அறிவித்தனர்