சேதுபதி – விமர்சனம்

sethupathi poster

காக்கிச்சட்டை படங்களின் அணிவரிசையில் புதிய இணைப்பு தான் இந்த ‘சேதுபதி’.. அந்த இணைப்புக்கான அங்கீகாரத்தை இந்தப்படம் பெற்றுள்ளதா.? பார்க்கலாம்.

மதுரை ஏரியாவில் உள்ள டெரர் இன்ஸ்பெக்டர் விஜய்சேதுபதி. சக போலீஸார் ஒருவரை தீ வைத்து கொன்றவர்களை விசாரிக்கும் வழக்கு இவர் கைக்கு வருகிறது. அந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறார் மதுரையில் தாதாவாக வலம் வரும் வாத்தியார் வேல.ராமமூர்த்தி.

இதற்கிடையே பள்ளி சிறுவர்கள் செயின் திருடிய வழக்கில் வீஜய்சேதுபதி டம்மி துப்பாக்கியை வைத்து விசாரிக்கும்போது அதில் ஒரு சிறுவனை தவறுதலாக சுட்டு விடுகிறார்.. அந்த சம்பவம் பூதாகரமாக மாறி அவரை சஸ்பென்ட் செய்ய வைக்கிறது. ஆனால் இப்படி தோட்டாவை போட்டு சதி செய்தது யார் என விசாரணையில் இறங்குகிறார்.

இதில் வேல.ராமமூர்த்தியின் பங்கு எதுவும் இல்லாமல், தனது துறையிலேயே ஒரு கறுப்பு ஆடு இருப்பதும் விஜய்சேதுபதிக்கு தெரிய வருகிறது.. இருந்தாலும் விஜய்சேதுபதி டூட்டியில் மீண்டும் சேர்ந்துவிட்டால் தனக்கு சிக்கல் என்பதால் அதை தடுக்கும் முயற்சியில் வேல.ராமமூர்த்தி இறங்குகிறார். இறுதியில் ஜெயம் யாருக்கு என பதில் சொல்கிறது க்ளைமாக்ஸ்.

விஜய்சேதுபதியின் முறுக்கு மீசை, புல்லட் பவனி, கண்களில் தெரியும் திமிர் என போலி கேரக்டரில் செம பிட்டாக இருக்கிறார். ஆனால் அவருக்கேர்ற போஷாக்கான சத்தான உணவை கதையில் இயக்குனர் அருண்குமார் தரவே இல்லை என்பதுதான் வருத்தம் தருகிறது. அழகு ரம்யா நம்பீசன் தான்.. ஆனால் அடிக்கடி விஜய்சேதுபதிக்கும் அவருக்கும் வரும் ஊடல், ரொமான்ஸ் காட்சிகளால் அலுப்பைத்தான் ஏற்படுத்துகிறார்..

வில்லனாக மிடுக்கு காட்ட முயற்சித்திருக்கிறார் வேல.ராமமூர்த்தி. சில இடங்களில் அது ஒர்க் அவுட் ஆகிறது.. ஆனால் அவரது கதாபாத்திர படைப்பின் பலவீனத்தால் ஓரளவுக்கு மேல் அவரால் சோபிக்க முடியவில்லை. சப் இன்ஸ்பெக்டராக வரும் லிங்கா, விசாரணை அதிகாரியாக வருபவர், போலீஸ் உயர் அதிகாரி ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். நிவாஸின் இசையில் இரண்டு பாடல்களும் கேட்கலாம் ரகம் தான். பின்னணி இரைச்சல் சத்தத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தி இருக்கலாம்.

போலீஸ் கதைகளில் இருக்கும் ஒரு விறுவிறுப்பு இதில் நன்றாகவே மிஸ்ஸிங் ஆகியிருக்கிறது. போலீஸ் கதையில் எதற்கு அடிக்கடி புருஷன் பொண்டாட்டி ஊடல்-கூடல், ரொமான்ஸ் எல்லாம்..? படத்தின் வேகத்தையே அதுதான். வில்லன் வேல.ராமமூர்த்தி தான் என பிக்ஸ் ஆனபின் அவர் பக்கம் கதையை நகர்த்தாமல், கிளைக்கதையாக ஒரு போலீஸ் அதிகாரியின் சுயநல குறுக்கீட்டில் விஜய்சேதுபதியை சிக்க வைத்திருப்பதும் அதற்கான விசாரணையில் நேரத்தை இழுத்தடித்திருப்பதும் தேவையற்றது.

போலீஸ் படங்களில் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்து வருவார்கள் என்பதை ஒரு ரசிகராக இருந்து இயக்குனர் அருண்குமார் யூகிக்க தவறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.