செம – விமர்சனம்

பார்க்கும் வரங்களே எல்லாம் தட்டிப்போகும் நிலையில், ஜோதிடரின் ஆலோசனைப்படி ஜி.வி.பிரகாஷுக்கு மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க போராடுகிறார் அவரது அம்மா சுஜாதா. வெளியூரில் இருக்கும் சமையல் காண்ட்ராக்டரான மன்சூர் அலிகான் மகள் அர்த்தனாவை பெண் பார்க்கப்போக, இருதரப்புக்கும் பிடித்துபோய் நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

அர்த்தனாவை ஒருதலையாக காதலிக்கும் அந்த ஊர் எம்.எம்.ஏ மகன், ஊரெல்லாம் கடன் வங்கி வைத்திருக்கும் மன்சூர் அலிகானை அழைத்து அவரது கடன்களை எல்லாம் செட்டில் செய்துவிடுவதாக கூறி அர்த்தானவை பெண் கேட்கிறார். கடன் பிரச்சனை தீர வழி கிடைத்து விட்டதால், எம்.எல்.ஏ மகனுக்கு மகளை தருவதாக வாக்கு கொடுத்துவிட்டு, ஜி.வி.பிரகாஷிடம் நிச்ச்யதார்த்தத்தை ரத்து செய்ய சொல்கிறார் மன்சூர்.

ஆனால் அர்த்தனாவோ ஜி.வி.பிரகாஷையே திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார். அதனால் அவரது அம்மா கோவை சரளா, மகளை சென்னைக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, சுஜாதாவுடன் சேர்ந்துகொண்டு ஜி.வி.பிரகாஷுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, இருவரையும் சென்னையிலேயே குடியமர்த்துகிறார்கள்..

கடந்துபோகும் நாட்களில் அர்த்தனா கர்ப்பம் ஆகிறார்.. ஆனால் இதெல்லாம் அவரது தந்தை மன்சூர் அலிகானுக்கு தெரியாமலேயே நடக்கிறது. இந்த விவரம் மன்சூர் அலிகானுக்கு எப்போது எப்படி தெரிய வருகிறது.. அப்போது என்ன பூகம்பம் வெடிக்கிறது என்பது தான் மீதிப்படம்.

இதுநாள் வரையில் வர்ஜின் பசங்க சாபம் என புலம்பிக்கொண்டிருந்த சிட்டி பையனாக பார்த்துவந்த ஜி.வி.பிரகாஷை கிராமத்தில் காய்கறி விற்பவராக பார்ப்பது புதுசாகத்தான் இருக்கிறது. ஆனால் கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றமட்டேன்கிறாரே என்பது போல அவரது பிராண்ட் நடிப்பு பல இடங்களில் வெளிப்படவே செய்கிறது.

ஜாடிக்கேத்த மூடியாக அர்த்தனா.. வரும் காட்சிகளில் எல்லாம் மனதை கொள்ளை கொள்கிறார். ஹீரோவின் நண்பனாக படம் முழுக்க வரும் யோகிபாபு கொளுத்தும் சரவெடியில் ஆங்கங்கே பல புஸ்ஸாகி விடுவது சோகம்.. முழுநீள படத்திலும் அவரை காமெடியனாக பயணிக்க வைக்க முடிவு செய்பவர்கள் தயவுசெய்து வசனங்களில் அவருக்கேற்ற தீனி போடுங்கள்.. அவரை வீணடிக்காதீர்கள்..

ஒரு காலத்தில் வில்லனாக கோலோச்சிய மன்சூர் அலிகானை இப்போதெல்லாம் என்ன என்ன விதமாக உருமாற்றுகிறார்கள் என பார்க்கும்போது ஆச்சர்யம் மேலிடுகிறது.. அவரும் அதை உணர்ந்து அசத்தலாக நடித்துள்ளார்.. கணவனை சமாளித்து மகளின் விருப்பத்தை நிறைவேற்றும் கேரக்டரில் கோவை சரளா வழக்கம்போல.. பொசுக் பொசுக்கென தற்கொலைக்கு முயற்சிக்கும் பருத்தி வீரன் சுஜாதாவும் கலகலப்பூட்டவே செய்கிறார்.

வேலைக்கு போவதாக அப்பாவை நம்ப வைத்து திருமணம் செய்வது, குழந்தை பிறக்கும் வரை அதை தாயின் உதவியுடன் மறைப்பது, ஜெயிலுக்கு போன கணவனை விரைவில் ரிலீஸாக விடாமல் மனைவி தடுப்பது, சென்னைக்கு அழைத்து வரும் கணவனை மகள் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் இழுத்தடிப்பது என காதுல பூ சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும் புதுமையெல்லாம் எதிர்பார்க்காமல், லாஜிக்கெல்லாம் பார்க்கமால் ஜாலியாக ரசித்துவிட்டு வரலாம் எனும்படியாக ஒரு படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த்..