“ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு போங்க “ இன்கம்டாக்ஸ் அதிகாரிகளை திருப்பிவிட்ட சூரி..!

Sema-Audio-Launch

இயக்குனர் பாண்டிராஜிடம் சில வருடங்களாக உதவி இயக்குனராக இருந்தவர் வள்ளிகாந்த். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. கதாநாயகியாக ‘தொண்டன்’ படத்தில் கவனம் ஈர்த்த அர்த்தனா நடித்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தை தனது சிஷ்யருக்காக தானே தயாரித்தும் உள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.. இந்தவிழாவில் பாண்டிராஜால் வளர்ந்து ஆளான சூரி மற்றும் சதீஷ் இருவருமே நட்புக்காக கலந்துகொண்டனர்.. மேடையில் ஜி.வி.பிரகாஷ் பற்றி பேசிய சூரி, வேடிக்கையாக ஒரு விஷயத்தை குறிப்பிட்டார்.

“எனக்கு திடீர்னு ஒருநாள் இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல இருந்து உங்க வீட்டுக்கு ரெய்டு வரப்போகிறோம்னு போன் வந்துச்சு.. எதுக்கு சார்னு கேட்டேன்.. நீங் அதிக படங்கள்ல நடிக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோம் அதான் ரெய்டு பண்ண வர்றோம் அப்படின்னாங்க.. ஸார் அப்படினா நீங் ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்குத்தான் முதல்ல ரெய்டு போகணும்.. அவர்தான் இன்னைக்கு தேதில எங்களை விட அதிகமான படங்கள்ல நடிக்கிறார் சொன்னேன்” என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் ஜி.வி.பிரகாஷ் அதிக படங்களில் நடிப்பது பற்றி வேடிக்கையாக குறிப்பிட்டார் சூரி..

மேலும் இந்த விழாவில் பார்த்திபன், சுசீந்திரன், பாண்டிராஜ், ஞானவேல்ராஜா, ஆர்யா, ராஜசேகர் பாண்டியன், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.