சீறு – விமர்சனம்

றெக்க படத்தை இயக்கிய ரெத்தின சிவா டைரக்ஷனில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சீறு. ஜீவா சீறி இருக்கிறாரா..? அவரது சீற்றம் கைகொடுக்குமா என்பதை பார்க்கலாம்

மாயவரம் பகுதியில் லோக்கல் கேபிள் சேனல் நடத்தி வருபவர் ஜீவா. இவரால் அந்த பகுதியில் முறைகேடாக தொழில் செய்துவரும் ஆர்என்ஆர் மனோகர் பாதிக்கப்படுகிறார். ஜீவா மீது நேரடியாக கைவைக்க முடியாது என சென்னையில் இருந்து பிரபல ரவுடியான வருணை வரவழைக்கிறார். ஆனால் வந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக ஜீவாவின் கர்ப்பிணி தங்கையை காப்பாற்றுகிறார் வருண். தன்னை கொலை செய்ய வந்தவன், தனது தங்கையை காப்பாற்றினான் என்பது தெரியவர வருணுக்கு நன்றி சொல்லி ஊருக்கு அழைத்து வருவதற்காக சென்னைக்கு தேடிச் செல்கிறார் ஜீவா.

சென்ற இடத்தில் வருணை அவரது ரவுடி நண்பர்கள் தாக்குதலிலிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். அந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், எதற்காக வருணை தாக்கினார்கள் என்று ஜீவா ஆராயத் துவங்க, அதன் பின்னணியில் மனதை உருக்கும் ஒரு கொடூரம் நடந்திருப்பது தெரிய வருகிறது.

இந்த நிலையில் ஜீவா எதிரிகளின் பிடியிலிருந்து வருணை காப்பாற்றினாரா, வருணை கொல்ல துடிக்கும் நபர் யார் எதற்காக கொல்ல துடிக்கிறார் என்பது போன்ற கேள்விகளுக்கு மீதி படம் விறுவிறுப்பாக விடை செல்கிறது.

ஜீவாவின் கடந்த சில படங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டால் இந்த படத்தில் அவரது தோற்றமும் சரி நடிப்பும் சரி ரொம்பவே மெருகேறி இருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் ஜீவா. ரசிகர்களுக்கு அவரை இந்த படத்தில் ரொம்பவே பிடிக்கும். அவருக்கு ஜோடியாக சில காட்சிகளில் வந்தாலும் குறை சொல்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாநாயகி ரியா சுமன். ரவுடியாக நடித்து இருக்கும் வருணின் கதா பாத்திரம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இடைவேளைக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு குறைந்து போனதாக தெரிந்தாலும் அதை ஓரளவு பிளாஸ்பேக் காட்சிகளை, ஓரளவு ஈடு கட்டி இருக்கிறார் இயக்குனர் இடைவேளைக்கு பிறகு 20 நிமிடங்கள் வரும் கோலிசோடா சாந்தினி பட்டாசாக பொரிந்து தள்ளுகிறார். வில்லனாக நவ்தீப் கோர முகம் காட்டி கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். கும்பலோடு கோவிந்தா போட்டு ஒப்பேற்றுகிறார் சதீஷ்.

இமானின் இசையில் வா வாசுகி பாடலும் செவ்வந்தியே பாடலும் மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. பின்னணி இசையிலும் அழகாக நம்மை திருப்திப்படுத்துகிறார்.

நட்பு என்றால் ஆண்கள் மட்டும்தானா, பெண்களும் நட்பென்றால் உயிரை கொடுக்க கூட தயங்க மாட்டார்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் ரத்தின சிவா. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாகவும் ஒரு மணிநேரம் போனதே தெரியாமல் ஓடி விடுகிறது. இடைவேளைக்குப் பின் அந்த அளவு வேகம் இல்லை என்றாலும் எந்த தொய்வும் இல்லாமல் ஒருசில திருப்பங்களுடன் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

பிளஸ் டூவில் பர்ஸ்ட் மார்க் வாங்கிய ஒரு மாணவி கலந்து கொள்ளும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்படியெல்லாம் தெனாவெட்டாக பேசுவாரா என்பதும் அதில் மற்றவர்களை பற்றி வெளிப்படையாகவே வசைபாட வேண்டிய தேவை என்ன வந்தது என்பது பற்றியும் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. அதேபோல சென்னை போன்ற நகரங்களில் இளம்பெண்கள் ஒரு கூட்டமாக எந்த ஆதரவும் இன்றி ஒரு நாள் இரவை தாண்டி விட முடியுமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி.

இதுபோன்ற ஒரு சில லாஜிக் இல்லாத விஷயங்களை தவிர மற்றபடி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால் இன்னொருவருக்கு வேறு ஏதோ ஒரு ரூபத்தில் எதிர்பாராத விதமாக உதவி கிடைக்கும் என்கிற கருத்தையும் அழகாக வலியுறுத்தியுள்ளார் இயக்குனர் ரெத்தின சிவா. மொத்தத்தில் கமர்சியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்குப் படம் இந்த ‘சீறு’ தாராளமாக இந்த படத்திற்கு டிக்கெட் போடலாம்.