சவாலே சமாளி – விமர்சனம்

படத்தின் தலைப்பே கதைக்குள் ஏதோ சவால் இருப்பதை முன்கூட்டியே உணர்த்துவதால், ஒரு எதிர்பார்ப்புடனேயே உள்ளே நுழைந்தோம்.. விஸ்காம் படித்த அசோக் செல்வன் தன தங்கையின் தோழியான பிந்துமாதவியை காதலிக்கிறார்.. பிந்துவோ பிடி கொடுக்காமல் மௌனம் சாதிக்கிறார்..

இந்நிலையில் கருணாஸ் நடத்தும், கிட்டத்தட்ட டுபாக்கூர் டைப் டிவி சேனல் ஒன்றில் வேலைக்கு சேர்கிறார் அசோக் செல்வன்.. அங்கே ஏற்கனவே தொகுப்பாளராக இருக்கும் ஜெகனுடன் கூட்டணி சேர்ந்து சேனலை பாப்புலராக்க முயற்சி எடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் காதலர்களை (கவனியுங்கள்.. கள்ளக்காதலர்களை அல்ல..) அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் சேர்த்துவைக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஊர்வசியை வைத்து ஆரம்பிகிறார்கள்.. மனோபாலாவை நிகழ்ச்சியின் இயக்குனராக்கி, ஆரம்பத்தில் நாடக நடிகர்களை வைத்து செட்டப் செய்து நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பாப்புலராக்கி விடுகிறார்கள்.

ஆனால் நிஜத்தில் இரண்டு பயங்கரமான அரசியல்வாதிகளின் வாரிசுகளின் காதலை சேர்த்துவைக்கும் நிஜ புராஜக்டையே எடுக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த சவாலை இருவரும் வெற்றிகரமாக எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் கலகலப்பான க்ளைமாக்ஸ்.

இத்தனை நாளாக சீரியஸ் சிகாமணியாக நாம் பார்த்து வந்த அசோக் செல்வனை இதில் சிரித்த முகத்துடன் பார்ப்பதே வித்தியாசமாக இருக்கிறது. பிந்துமாதவியை விரட்டி விரட்டி மொக்கை போடும் போதும், அதனால் தன தங்கையின் கடுப்பிற்கு ஆளாகும்போதும் ‘ஏன் பாஸ் இப்படி?’ என கேட்க வைத்துவிடுகிறார். அதேசமயம் காதலர்களை சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்ததும் ஜெகனுடன் சேர்ந்து காமெடி குளத்தில் குதித்து அதிலும் நீந்தி கரையேறி விடுகிறார்.

அசோக் செல்வனுக்கு ஏற்ற சரியான ஜோடியாக பிந்து மாதவி.. பேச்சிலேயே அசோக் போடும் ரம்பத்தை தாங்காமல் பிந்து மாதவி மயங்கி விழும் இடம் செம லந்து. அதேபோல பிந்து தனது காதலை சொல்லவரும்போது, சூழ்நிலையால் அவரது காதலை அசோக் செல்வன் ஏற்க மறுப்பது செம கலாட்டா.. இடைவேளைக்கு பின்னும் பிந்துவுக்கு சில காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம்.

அசோக் செல்வனுடன் சேர்ந்து தனது காமெடியால் படத்தை தாங்கி பிடிக்கிறார் ஜெகன்.. அவரது சேனல் அனுபவமும் இதில் நன்றாகவே அவருக்கு கைகொடுக்கிறது.. கடைசி அரை மணி நேரத்தை ஊர்வசி தன் கையில் எடுத்துக்கொள்கிறார்.. யப்பா.. காதலர்களை சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியில் ஊர்வசி அடிக்கும் கூத்துக்கள் அனைத்து காமெடி பட்டாசுகள் தான்.

காதலர்களின் தந்தைகளாக, அரசியல்வாதிகளாக வரும் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் தாங்கள் வீட்டில் கொடுத்த பேட்டியை டிவி நிகழ்ச்சியில் எடிட்டிங் மேஜிக் மூலம் அப்படியே உல்டாவாக்கி, காட்டுவதை பார்த்து பதறுவதும் என தங்கள் பங்கிற்கு காமெடி கோதாவில் குதித்துள்ளார்கள்.

கொஞ்சம் சீரியஸ் ப்ளஸ் அளவான காமெடி என கருணாசுக்கு ஏற்ற கேரக்டர் அவருக்கு அம்சமாக செட்டாகிறது. நட்புக்காக கொஞ்ச நேரமே வந்தாலும் நிரோஷாவும் கலகலப்பை ஊட்ட தவறவில்லை.. செட்டப் நிகழ்ச்சியை டைரக்ட் பண்ணும் மனோபாலாவின் அலப்பரைகள் குழந்தைகள் ஏரியாவை கவர் பண்ணிவிடுகிறது. அசோக் செல்வனின் தங்கையாக வரும் சுவாதி தனது செல்ல கோபங்களால் நம் மனதில் நிறைகிறார்.

டிவி சேனல் பின்னணியில் ஒரு கலகலப்பான படத்தை தந்துள்ளார் இயக்குனர் சத்யசிவா. இடைவேளைக்கு முன்பு வரை சாதாரண ஒரு படமாகவே நகர்த்திச்செல்லும் இயக்குனர், இடைவேளைக்குப்பின் நான்ஸ்டாப் காமெடி கலாட்டாவில் அந்த குறையை போக்கி படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.