சிபிராஜின் ‘சத்யா’ பர்ஸ்ட் லுக் வெளியானது..!

sathya first look

‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார்.. இத்தனை நாட்களாக டைட்டில் வைக்காமலேயே தயாராகிவந்த இந்தப்படத்திற்கு இப்போது ‘சத்யா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக்கும் வெளியானது.

கைகள் பின்னால் கட்டப்பட்டுள்ள நிலையில் தாடியுடன் சிபிராஜ் காட்சியளிக்கும் அந்த போஸ்டரே படம் குறித்த ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக இருக்கிறது. இந்தப்படத்திற்கு வைப்பதற்காக பல டைட்டில்கள் ஆலோசிக்கப்பட்டாலும், கடைசியில் மொத்தப்படத்தையும் தனது தொழில் தூக்கி சுமக்கும் நாயகனின் கேரக்டர் பெயரான ‘சத்யா’வையே வைத்துவிட்டார்கள்.. சிபிராஜின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும்.

இந்தப்படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் வரலட்சுமி சரத்குமார் தான் படத்தின் முதுகெலும்பே என்கிறார்கள் படக்குழுவினர்.. ஆம்.. இதில் அதிரடியான அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் வரலட்சுமி..

இன்னொரு முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் காமெடியன் சதீஷ் முதன்முறையாக கதைக்கு திருப்பம் ஏற்படுத்துகின்ற சீரியசான கேரக்டரில் நடித்துள்ளார் குணச்சித்திர நடிகை வினோதினிக்கும் இந்தப்படத்தில் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார்.

தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘க்ஷணம்’ என்கிற படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவானாலும் கூட, அதில் இருந்து மைய இழையை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி கதை பின்னியிருகிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

‘555’ படத்திற்கு இசையமைத்த சைமன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆனாலும் இந்தப்படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இடம்பெறுகிறது என்பது ஆச்சர்யம்.. காரணம் கதையின் தன்மையும் வேகமும் அப்படி.. இந்த வருட கோடை விடுமுறை வெளியீடாக இந்தப்படம் ரிலீஸாகிறது.

இதற்கு முன்பாக அதாவது இந்த மாதத்திலேயே சிபிராஜின் இன்னொரு படமான ‘கட்டப்பாவ காணோம்’ படம் ரிலீசாகும் என்றே தெரிகிறது. அதுமட்டுமல்ல, சிபிராஜின் அடுத்த பட அறிவிப்பும் கூட இந்த மாதத்திலேயே வெளியாகும் என்றும் சிபிராஜே கூறியுள்ளாராம்.

நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை தயாரித்து வருகிறது சத்யராஜ்ஜின் நாதாம்பால் பிலிம் பேக்டரி.