சதுரங்க வேட்டை – விமர்சனம்


கோடிகளில் விலைபோகும் இடி தாக்கிய கோபுர கலசம், ஈமு கோழிப்பண்ணை, எம்.எல்.எம் மோசடி என அடிக்கடி செய்திகளில் படிக்கிறோமே அதன் பின்னணியில் என்னதான் நடகிறது என்பதை விறுவிறுப்பாகவும் அதேசமயம் விலாநோக சிரிக்கவைப்பதுமாக சொல்லியிருகிறது இந்த ‘சதுரங்க வேட்டை’..!

நடிகர் மனோபாலா தயாரிப்பு என்கிறபோது ஒரு அறிமுக இயக்குனர் கேட்டால், மனோபாலாவால் ஒரு முன்னணி நடிகரையே புக் பண்ணிக் கொடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியில் பிரபல கேமரமேனாகவும், தமிழில் ஒன்றிரண்டு படங்களில் சாதாரண நடிகராகவும் நடித்தவர் ‘நாளை’ நட்ராஜ். அவரை தேடிப்போய் தனது அறிமுகப்படத்திலேயே கதாநாயகனாக்கியது ஏன் என்கிற கேள்விக்கு படம் பார்க்கும்போது தெளிவான, நியாயமான் விடை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வினோத்..

சீட்டிங் பேர்வழி என்றாலே நம் நினைவுக்கு வரும் நடிகர் ஜீவனை எல்லாம் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் நட்டி. எந்த இடத்திலும் உறுத்தாத இயல்பான நடிப்பால் நமக்கு எங்கேயும் ‘நட்டி’ தெரியவில்லை ‘காந்திபாபு’ கேரக்டர் மட்டும் தான் தெரிகிறது. இவரை தவிர இன்னொருத்தர் இந்த கேரக்டரை.. ம்ஹூம்.. சான்ஸே இல்லை.

அப்பாவியாக, ஏமாற்றுக்காரனைக்கூட அவன் கோணத்தில் இருந்து பார்க்கும் வெள்ளந்தியான கொங்குப் பெண்ணாக நடித்திருக்கும் இஷாராவை மட்டும் குறைசொல்ல முடியுமா என்ன..? இல்லை, படம் நெடுகிலும் நட்டியுடன் சேர்ந்து சீட்டிங் கலாட்டா பண்ணும் எஸ்.பி.ஜி.வெங்கடேசையோ, சுத்தமான இலங்கை தமிழில் பேசி வில்லத்தனம் காட்டும் வளவனையோ, வில்லத்தனத்திலும் சென்டிமெண்ட் காட்டி சிலிர்க்க வைக்கும் ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரனையோ தான் குறைசொல்லி விட முடியுமா..?

படத்தின் ஹைலைட்.. ஆரம்பக்காட்சிகளில் செட்டியாராக வரும் இளவரசு தான்.. பாம்புக்கு பெயர் வைப்பதும் அதை வீட்டில் பதுக்கி வைப்பதுமாக அதகளம் பண்ணுகிறார்.. ஆனால் பொன்வண்ணனின் போலீஸ் கதாபாத்திரம் தான் நமக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஏமாற்றத்தை அளிக்கிறது.

விறுவிறுப்பாக போகும் படத்தின் வேகத்தை பாடல்களால் குறைத்துவிடக்கூடாது என்பதற்காக வெறும் இரண்டு பாடல்களை மட்டுமே வைத்த இயக்குனரின் துணிச்சலையும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனையும் பாராட்டியே ஆகவேண்டும். கூடவே ஒளிப்பதிவாளர் வெங்கடேஷையும்.
அறிமுகப்படத்திலேயே கவனம் ஈர்ப்பது எல்லா இயக்குனர்களுக்கும் எளிதில் கைவந்து விடாது. வருடத்திற்கு ஒன்றிரண்டு பேர் தான் அப்படி வருவார்கள். அதில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார் எச்.வினோத்.. குறிப்பாக நறுக்கு தெரித்தாற்போன்ற வசனங்களில் தொடர் கைதட்டலை அள்ளுகிறார்.

நான்கு சீட்டிங் விஷயங்களை கையில் எடுத்து அந்த நான்கிற்கும் சுவராஸ்ய முடிச்சுப்போட்டு சுவராஸ்யமாக கதைபின்னி, இறுதியில் சுபமாக முடிப்பதோடு பின்னணியில் ‘பேராசை பெருநஷ்டம்’ என்கிற ஒரு படிப்பினை செய்தியையும் சொல்லியிருக்கிறார் வினோத். இயக்குனராக வினோத்திற்கும் தயாரிப்பாளராக மனோபாலாவுக்கும் இது அறிமுக வெற்றி.. திரையிட்ட்ட திருப்பதி பிரதர்சுக்கு ஹாட்ரிக் வெற்றி.