‘சதுரங்க வேட்டை’யில் இறங்கியது திருப்பதி பிரதர்ஸ்..!

ரஜினி, விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து எண்பது, தொண்ணூறுகளில் சூப்பர்ஹிட் படங்களை தந்த இயக்குனரும் தற்போது பிஸியான நகைச்சுவை நடிகருமான மனோபாலா ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப்படத்தை ஹெச்.வினோத் எனபவர் இயக்கியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத ஷான் ரால்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படங்களை தயாரிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நல்ல படங்களாக இருந்தால் அவற்றை லாப நோக்குடன் மட்டும் பார்க்காமல், மக்களிடம் அதைக்கொண்டுபோய் சேர்க்கும் விதமாக செயல்பட்டு வரும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். நிறுவனம் தற்போது இந்த ‘சதுரங்க வேட்டை’ படத்தை வாங்கி வெளியிடுகிறது.

இந்தப்படத்தை நேற்று தான் திருப்பதி பிரதர்ஸுக்கு போட்டுக்காட்டினார் மனோபாலா. படத்தை பார்த்த லிங்குசாமியும் அவரது தம்பி சுபாஷும் படத்தின் இயக்குனர் வினோத்தின் மேக்கிங் ஸ்டைலை ரொம்பவே பாராட்டியதோடு, அந்தக்கணமே இதை தாங்களே வெளியிடவும் முடிவு செய்துவிட்டனர்.

இந்த வருடத்திலேயே திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட ‘கோலிசோடா’ மற்றும் ‘மஞ்சப்பை’ ஆகிய படங்கள் ஹிட்டாகி நல்ல வசூலையும் வாரிக்குவித்தன. இதில் ‘கோலிசோடா’ 50 நாட்களை தாண்டியதும் ‘மஞ்சப்பை’ தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.