சதுர அடி 3500 – விமர்சனம்

sadhura adi 3500

நகரத்தின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் அதிபர் ஆகாஷ் மர்மமான முறையில் இறக்கிறார். இந்த வழக்கு துடிப்பான போலீஸ் அதிகாரி நிகிலிடம் வருகிறது. ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதற்குள் ஆகாஷின் ஆவி பல இடங்களில் தென்பட்டு நிகிலை குழப்புகிறது.

இதற்கிடையே ஆகாஷின் காதலி இனியா மூலமாக ஆகாஷ் பற்றிய சில திடுக்கிடும் உண்மைகள் நிகிலுக்கு தெரிய வருகிறது. மேலும், ஆகாஷின் இந்த நிலைக்கு காரணம் ரியல் எஸ்டேட் மாபியா தலைவரான பிரதாப் போத்தன் தான் என்பதும் தெரிய வருகிறது. இந்த சிக்கலான வழக்கை நிகில் எப்படி முடிக்கிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்..

அறிமுக நாயகன் நிகில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக தோற்றத்தில் கம்பீரம் காட்டுகிறார். சண்டைகாட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.. ஆனால் அவர் துப்பறியும் காட்சிகளில் அடிக்கடி தொய்வு ஏற்படுவது அவரது கேரக்டரின் கனத்தை குறைக்கவே செய்கிறது. அதை கவனித்திருக்கலாம். மர்மச்சாவு என கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இன்னொரு நாயகனான ஆகாஷும் கவனம் ஈர்க்கிறார். இனியாவின் கேரக்டர் என்ன அவர் யாரை காதலிக்கிறார் என்கிற குழப்பம் நீங்குவதற்குள்ளாகவே படம் முடிந்துவிடுகிறது. இதில் அவரை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு வரும் இளைஞனின் எபிசோட் மனதில் ஓட்ட மறுக்கிறது.

ஆரம்பத்தில் பில்டப்புடன் போலீஸ் அதிகாரியாக சில நிமிடங்கள் மட்டுமே வரும் ரகுமான், அதற்குப்பின் படம் முழுவதும் ஆளையே காணோம் என்பது ஏமாற்றம் தருகிறது.. குறிப்பாக இன்னொரு போலீஸ் அதிகாரியான தலைவாசல் விஜய் வரும் நேரம் கூட ரகுமான் வரவில்லையே என்பது பரிதாபம்.

கோவைசரளா-எம்.எஸ்.பாஸ்கர் காமெடி சில நேரங்களில் (மட்டுமே) சிரிக்க வைக்கிறது. அட.. வில்லனின் அடியாளாக வந்துபோகும் பெசன்ட் நகர் ரவிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. மனோபாலா, பறவை முனியம்மா, பிரதாப் போத்தன் அனைவருமே ஊறுகாய் அளவுக்கு என்றாலும் நறுக்கென தொட்டுக்கொள்ளப்பட்டிருகிறார்கள்.

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரில், கொஞ்சம் ஹாரரையும் கலந்து மிரட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜெய்சன்.. ஆனால் திரைக்கதையாக மாற்றும்போது பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார்.. மேலும் ரியல் எஸ்டேட் தான் படத்தின் டைட்டிலாக வைக்கும் அளவு மையக்கருவாக இருந்தாலும் க்ளைமாக்ஸில் அதை ஏதோ போகிற போக்கில் சொல்லாமல் இன்னும் வலுவாக காட்டியிருக்கலாம்..

சதுர அடி 3500 – இந்த ஏரியாவுக்கு இந்தவிலை கொஞ்சம் அதிகம் தான்